கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் பிறப்பு, இறப்பை பதிவு செய்வதற்கான காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா பெருந்தொற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் பிறப்பு, இறப்பை பதிவு செய்வதற்கான காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.  துயரமான இந்த சம்பவத்தில், சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.  இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமத கட்டணம் ரூ.100 ஆகவும், 30 நாட்களுக்கு பின் ஓராண்டிற்குள் காலதாமத கட்டணம் ரூ.200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமத கட்டணம் ரூ.500 ஆகவும் உள்ளது. பெருந்தொற்றினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், இந்த கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், இந்த கட்டணத்தில் இருந்து பொதுமக்களுக்கு விலக்களிக்கவும், அந்த காலதாமத கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தை வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.  காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசே ஈடுசெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை