Thursday, July 4, 2024
Home » கொரட்டூரில் பலத்த காற்றுடன் மழை 100 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது; கொட்டும் மழையில் மேயர் பிரியா ஆய்வு

கொரட்டூரில் பலத்த காற்றுடன் மழை 100 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது; கொட்டும் மழையில் மேயர் பிரியா ஆய்வு

by kannappan

அம்பத்தூர்: கொரட்டூரில் கல்லூரி வளாகத்திற்கு அருகே நூற்றாண்டுகள் பழமையான மரம் ஒன்று பலத்த மழையில் முறிந்து விழுந்தது. மேயர் பிரியா கொட்டும் மழையில் மரம் விழுந்த இடத்தையும், மழைநீர் செல்லும் வழித்தடங்களையும் நேரில் ஆய்வு செய்தார். சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் கள்ளிக்குப்பம், பாடி, முகப்பேர் கிழக்கு, அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நேற்று காலை பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் கொரட்டூர் பக்தவச்சலம் பள்ளி மற்றும் கல்லூரி வளாகம் அமைந்துள்ள நிழற்சாலையில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் ஒன்று முறிந்து சுக்குநூறாக கீழே விழுந்தது. மரம் விழுந்த போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மேயர் பிரியா சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்றார். மரம் விழுந்த பகுதியை பார்வையிட்டு, அதை உடனே அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொரட்டூரில் மழைநீர் கால்வாய் பணிகளை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டார். அப்போது, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் ராஜசேகர், கிராம அலுவலர் பிரேம்குமார், கொரட்டூர் வருவாய் ஆய்வாளர் பூங்குழலி கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர். வில்லிவாக்கம் பஸ் டிப்போ மூர்த்தி நகர், தெற்கு மாட வீதி, வடக்கு மாடவீதி, ஜெகநாதன் நகர், ராஜாஜி நகர், ரெட்டி தெரு, சிட்கோ நகர், அன்னை சத்யா நகர் போன்ற பகுதியில் மழைநீர் இரண்டு அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால், நேற்று காலை பணிக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கொரட்டூர் பகுதியில் வடக்கு நிழற்சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதேபோன்று, அம்பத்தூர் டி.டி.பி காலனி, கருக்கு போன்ற பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள மழைநீர் கால்வாய் நிரம்பி வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது. அண்ணாநகர்: அண்ணா நகர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று முன்தினம் இரவு 4 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி, அண்ணாநகர் 8வது மண்டல மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர். பின்னர். அப்பகுதிகளில்  போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மழை குறித்த புகார்களை, இலவச எண் 1913 மற்றும் 044- 25619206 044-25619207 044- 25619208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு   தெரிவிக்கலாம். மாநகராட்சி ஊழியர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு மிகவும் அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மரங்களை வெட்டி அகற்றுவதற்கான இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களோடு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், எந்த பகுதி என்றாலும் அப்பகுதி மக்கள் மழை பாதிப்புகள் குறித்த தகவல்களை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு  தெரிவிக்கவேண்டும்’’என கூறினர். அயனாவரம் வி.பி காலனி 3வது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் தனியார் நிறுவன ஊழியர் ராஜ்குமார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நேற்று காலை ராஜ்குமார் வீட்டின் முன்பு இருந்த பெரிய மரம் ஒன்று காரின் மீது வேரோடு சரிந்து விழுந்தது. கார் முற்றிலுமாக சேதமடைந்தது….

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi