கொடுங்கையூர், எருக்கஞ்சேரியில் குரூப் 4 தேர்வுக்கு தாமதமாக வந்ததால் 50 மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பெரம்பூர்: கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியில் குரூப் 4 தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வுகள் இன்று நடைபெற்றது. வட சென்னைக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனியில் உள்ள பள்ளிக்கு 9.01 மணிக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதவந்தனர். ஆனால் அவர்கள் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதுபோல், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி, கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 9 மணிக்கு மேல் வந்தவர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக பள்ளி நிர்வாகத்துக்கும் தேர்வு எழுத வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனி பள்ளியில் தேர்வு எழுதவந்த நபர்கள் முகவரி மாறி இருந்ததாக கூறி வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். இதன்பிறகு மீண்டும் குறிப்பிட்ட அந்த பள்ளியை தேடி வர காலதாமதமானதால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள், பள்ளி நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   இதுபற்றி அறிந்ததும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வந்து சமாதானப்படுத்தினார்.தேர்வு எழுதுவந்திருந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘’தேர்வுக்காக கடந்த 6 மாதங்களாக கஷ்டப்பட்டு படித்து தயார் செய்து வைத்திருந்தோம். தேர்வு மையத்தை கண்டுபிடிப்பதற்குள் காலதாமதமாகிவிட்டது. 9.02  மணிக்கு தேர்வு எழுத  வந்தேன். ஆனால் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மீண்டும் எப்போது தேர்வு நடத்துவார்கள் என்று தெரியவில்லை. எனது எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது’ என்றார்.தேர்வு எழுத வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட சீட்டில் 9.30 மணிக்கு தேர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் காலை 9.15 மணி வரை வரலாம் என நினைத்துக்கொண்டார்கள். இதனால்தான் இது போன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதன்காரணமாக கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை