கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இங்குதான் ஓய்வெடுக்க வருவார். பாதி நாட்கள் கொடநாடு எஸ்டேட்டில் இருந்தபடியே பணிகளையும் செய்து வந்தார். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017 ஏப்ரல் மாதம் இந்த பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்தது. எஸ்டேட் செக்யூரிட்டி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பங்களாவில் விலையுயர்ந்த பொருட்கள், முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்கம், வைர நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில், தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. சயான் காரில் சென்றபோது லாரி மோதியது. அதில் அவரது மனைவி உயரிழந்தார். சயான் படுகாயத்துடன் தப்பினார். சில நாட்களில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜூம் அதேபோல விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவங்களுக்குப் பின்னால் பெரிய அரசியல் சதி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியாதா என்று அதிமுகவினர் ஆதங்கப்பட்டனர்.2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சென்னை சிஐடி நகரில் உள்ள கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தியபோது சில ஆவணங்களை கைப்பற்றினர். கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், டிஐஜி முத்துச்சாமி ஆகியோரது தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வருமான வரித்துறையினர் மூலம் அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.அதனடிப்படையில் தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இந்த வழக்கில்  தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், ஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் ஓரிரு நாளில் கொடநாடு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கொடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்குவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்