Friday, September 20, 2024
Home » கைவினைப் பொருட்கள் தயாரிக்கலாம்…கை நிறைய சம்பாதிக்கலாம்

கைவினைப் பொருட்கள் தயாரிக்கலாம்…கை நிறைய சம்பாதிக்கலாம்

by kannappan

நன்றி குங்குமம் தோழிசிறு தொழில் பெண்கள் வீட்டிலிருந்து செய்யக்கூடிய பல்வேறு சிறு தொழில்களை நாம் இப்பகுதியில் சொல்லி வருகிறோம். அந்த வகையில், நம் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்துவரும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம். ஏனெனில், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என்பது ஒருவரது வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் மன அமைதியைக் கொடுக்கும், மன  அழுத்தத்தைப் போக்கும், உடல் மனம் சார்ந்த ஓர் ஆன்மிக வளர்ச்சிக்கான வழிமுறையாகவும் துணை நிற்கின்றன.இடையில் ஏற்பட்ட எதிர்பாராதவிதமாக, தொழில்மயமாக்கலும், அதன் விளைவாக பெருமளவிலான உற்பத்தியும் பல கைவினைக் கலைகளின் அடிப்படையையே சீர்குலைத்திருக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் பல கைவினைப்பொருட்கள் இருந்த இடமே இப்போது தெரியவில்லை. நமது வருங்கால சந்ததியினருக்கு நமது மரபின் மீதும் கலைகளின் மீதும் நிலைத்திருக்கும்படியான தாக்கத்தை ஏற்படுத்த ‘‘நமது பாரம்பரிய கலைகளையும், கலைத்திறனையும் மீட்டெடுத்து, புத்துயிரூட்டும் பெருமுயற்சியில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன்’’ என்கிறார் சென்னை வடபழனியில் கடந்த ஏழு ஆண்டுகளாக கைவினைப் பரிசுப் பொருட்கள் தயாரித்து நமி ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் (Nami Return Gifts) என்ற பெயரில் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வரும் கார்த்திஹாயினி வெங்கடேஷ்.கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழில் மற்றும் அதனால் கிடைக்கும் மனநிறைவு, வருமானம் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துகொண்டதைப் பார்ப்போம்…‘‘ கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டால் கவலையின்றி வாழலாம். ஏனெனில், கற்றுக்கொண்ட எந்தவொரு தொழிலையும் முழு  ஈடுபாட்டுடன் செய்து வந்தால் அத்தொழில் ஒருநாளும் நம்மை கைவிடாது. இயந்திரமயமாகிவிட்டாலும், இன்றைக்கும் நாம் கைகொண்டுதானே சாப்பிடுகிறோம். அதேபோன்று எத்தனைப் பொருட்கள் இயந்திரங்களால் உருவாக்கப்பட்டாலும் நம் கையால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு தனி மவுசு எப்போதுமே உண்டு. அந்த வகையில் சுபநிகழ்ச்சிகள் மற்றும் நவராத்திரி விழாக்களில் வீட்டு அலங்காரங்களில்  பயன்படுத்தப்படும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை வீட்டிலேயே தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறேன். பொதுவாக வாடிக்கையாளர்கள் கடைகளில் கிடைக்கும் பரிசுப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்வார்கள். நான் அந்த  நிலையை மாற்ற விரும்பினேன். நான் செய்யும் தொழிலால் நாலுபேராவது பயன்பெற வேண்டும் என்பதற்காக வேலைக்கும் ஆட்களை  அமர்த்தியுள்ளேன். நாங்கள் எங்களின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் காண்பிப்போம். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையில் (Customize) செய்து கொடுத்து வருகிறோம். இந்த முயற்சி வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வெறும்  வாடிக்கையாளர்களாக மட்டும் பார்க்காமல் அவர்களை எங்களின் தோழிகளாக பாவித்து வாடிக்கையாளர் சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட மறுவிற்பனையாளர்களும் சிங்கப்பூர், மலேசியா, குறிப்பாக அமெரிக்கா மற்றும் லண்டன் நாடுகளில்  50-க்கும் மேற்பட்ட மறு விற்பனையாளர்களும் எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நாங்கள் அனைத்தையும் வீட்டிலேயேதான் தயார் செய்கிறோம். எங்களது படைப்பையும் அதற்குப்பின் இருக்கும் உழைப்பையும்  பாராட்டி எனது பொருட்களை விரும்பி வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்லும்போது ஏற்படுகின்ற மனநிறைவைச் சொல்ல வார்த்தைகள் போதாது.90 சதவிகிதம் இந்திய தயாரிப்புகளை மட்டுமே வடமாநிலங்களிலிருந்து வரவழைத்து அதில் குத்தன் கற்கள், முத்துக்கள் லேஸ் போன்றவற்றைக் கொண்டு அலங்கரித்து அழகிய கைவினை வீட்டு அலங்காரப் பொருட்களை உருவாக்குகின்றோம். வாடிக்கையாளர் வீட்டில் நடக்கும் சுபவைபவங்களுக்கு அவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப மொத்த விலைக்கு குறைந்த நேரத்தில் கைவினை பரிசுப்பொருட்களை தயாரித்துக் கொடுக்கின்றோம்.வீட்டிலிருந்தே அக்ரிலிக் ரங்கோலி 100 சதவிகிதம் கையால் செய்யப்பட்ட பொம்மைகள், கொலுவிற்குத் தேவைப்படும் சுவாமி சிலைகள் அலங்காரம், உபயோகமான பரிசுப் பொருட்கள் செய்வதன் மூலமாக மாதம் 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். கலைத்திறமையும், பொறுமையும், நேர்மையான உழைப்பும் இருந்தாலே கைவினைப் பொருட்களை விற்பனை செய்து சிறந்த முறையில் சம்பாதிக்கலாம்.எங்களின் அன்பு வாடிக்கையாளர்கள், நவராத்திரி நேரங்களில் எங்களுக்கு ஓய்வு எடுக்கக்கூட நேரம் தரமாட்டார்கள். குறைந்த நேரம், ஆனால் நேர்த்தியான பொருட்களை உருவாக்க வேண்டும். ஆகவே நவராத்திரி காலங்களில் நான்கைந்து நபர்களை வேலைக்கு அமர்த்தி வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை செய்து தருகின்றோம். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு  வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் புகைப்படங்களை  அனுப்பி வைப்போம். சிலரிடம் காணொளி உரையாடல் (Video Conference) மூலமாக அவர்களிடம் கலந்துபேசி அவர்களின் தேவையை அறிந்து  கைவினைப் பொருட்களை உருவாக்கித் தருகின்றோம். எங்களிடம் 10 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தரமான கைவினைப் பொருட்கள் இருக்கின்றன. சாதாரணமாக மக்களிடையே ஒரு தவறான கருத்து  நிலவி வருகிறது. கைவினைப் பொருட்கள் என்றாலே விலை அதிகம் இருக்கும் என்று நினைத்து வாங்கத் தயங்குகின்றனர். ஆனால், நாங்கள் அந்த நிலையை மாற்றி அமைத்துள்ளோம். 25 ரூபாய்க்கே எங்களிடம் அழகான குந்தன் கற்களால் வடிவமைக்கப்பட்ட அக்ரலிக் குங்குமச் சிமிழ்கள் மட்டும்  20-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கல்யாணத் தாம்பூலம்  பைகளுக்கும், நவராத்திரி நேர சுமங்கலித் தாம்பூலத்திற்கும் மிகச்சிறந்த ஒரு பரிசுப்பொருள். எங்களிடம் ஆர்டர் செய்பவர்களுக்கு சிறந்த பொருட்களை தரமான முறையில் பேக்கிங் செய்து கூரியரில் அனுப்பி வைக்கின்றோம்.  இதில் இந்திய தபால் துறையின் பங்கு முக்கியமானது. எங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி வரும் நபர்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு துறையில் கைதேர்ந்த நபர்களை வைத்து பயிற்சி அளிக்கிறோம். எங்களிடம் பயிற்சி பெற்று பலனடைந்த பலரும் இந்தத் துறையில் சாதனை புரிந்து வருவதை பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொருட்களை தரமாக தயாரிப்பதும், அதனை மார்க்கெட்டிங் செய்து வாடிக்கையாளர்களை தக்கவைப்பதும் அவரவர்  திறமையைப் பொறுத்தது. ஆன்லைன் என்ற இணையம் இன்றைக்கு நம் கைகளில் உலகத்தைத் தந்துள்ளது. அதைப் பயன்படுத்திக்கொள்வது  நம்மிடம்தான் உள்ளது. அந்த வகையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் அன்பும், ஆசீர்வாதமும் எங்களை மேன்மேலும்  முன்னேற்றப் பாதையை நோக்கி கூட்டிச்செல்கிறது.ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னே கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள். அதுபோன்று இன்றைக்கு  இரண்டு நபர்களை வேலைக்கு வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு என்னை உயர்த்திய இந்த கைவினைப் பொருட்கள் தயாரிப்பு  தொழிலுக்கு எனது அன்பு கணவரும், எனது குடும்பத்தினரும், எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்’’ என முத்தாய்ப்பாய்  முடித்தார் கார்த்தி ஹாயினி வெங்கடேஷ்.– தோ.திருத்துவராஜ்

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi