கேரளாவுக்கு கடத்த முயன்ற 200 லிட்டர் மண்ணெண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்

நித்திரவிளை, டிச. 1: குமரி மாவட்டத்தில் பைபர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், வருவாய்துறையினர், மற்றும் காவல் துறையினர், மண்ணெண்ணெய் கடத்தி செல்லப்பட்ட வாகனங்களை மடக்கி பிடித்து வருகின்றனர். இப்படி பிடிக்கப்படும் வாகனங்கள், மக்கள் பிரதிநிதிகள் தலையீடு காரணமாக சில நேரங்களில் விடுவிக்கப்படுகிறது. இருந்தாலும் வருவாய்துறையினர் மற்றும் காவல் துறையினர் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தி செல்லும் வாகனங்களை மடக்கி பிடித்து, வாகனத்தையும், மண்ணெண்ணெயையும் பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று காலை 11 மணியளவில் கொல்லங்கோடு காவல் நிலைய ஏட்டு கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திருமன்னம் சந்திப்பு வழியாக, கேரள பதிவெண் கொண்ட ஒரு பயணிகள் ஆட்டோ வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பைபர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு கேன்களில் சுமார் 200 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மண்ணெண்ணெய் மற்றும் ஆட்டோவை கைப்பற்றி கொல்லங்கோடு காவல் நிலையம் கொண்டு ஒப்படைத்தனர். போலீசார் ஆட்டோ மற்றும் மண்ணெண்ணெயை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?