கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

 

கோவை, செப்.15: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்கு கோவை பாலக்காடு மெயின் ரோடு மதுக்கரை குவாரி ஆபீஸ் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், ரேஷன் அரிசி 50 கிலோ விதம் 25 மூட்டைகளில் மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கணுவாய் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கணபதி, மணிக்காரன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள ரேஷன் அரிசி வாங்கும் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், ரேஷன் அரிசி மற்றும் வாகன உரிமையாளரான கணபதியை சேர்ந்த முனிஸ்வரன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை