கேரளாவில் 2 நாளாக உயிருக்கு போராட்டம் மலையில் இருந்து தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர்: ராணுவம், விமானப்படை விரைவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே உள்ள செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு (26). நேற்று முன்தினம் இவர் தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன் அங்குள்ள செராடு மலைக்கு சாகசப் பயணம் சென்றார். இந்த மலை மிகவும் செங்குத்தானதாகும். இதனால் யாரும் அங்கு அதிகமாக செல்வது கிடையாது. ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்ததால் பாதி வழியில் 2 நண்பர்கள் திரும்பி விட்டனர். பாபு தொடர்ந்து ஏறினார். சிறிது தூரத்திற்கு பிறகு அவராலும் ஏற முடியவில்லை. இதனால், கீழே இறங்க தீர்மானித்தார். அப்போது, கால்  வழுக்கி கீழே விழுந்தபோது பாறை இடுக்கில் சிக்கினார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவரால் பாறை இடுக்கில் இருந்து ஏற முடியவில்லை. செல்போன் மூலம் நண்பர்கள், தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்களால் பாபு இருக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. தேசிய பேரிடர் படையினர் ஹெலிகாப்டரில் சென்று மீட்க முயற்சித்தனர். அவர் சிக்கியிருந்த பாறை இடுக்கின் அருகே ஹெலிகாப்டரால் செல்ல முடியவில்லை. பாலக்காடு மாவட்ட கலெக்டர் மியூன்மயி ஜோஷி, எஸ்பி விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்க  நடவடிக்கை எடுத்தனர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் வாலிபரை மீட்பதற்காக ராணுவ உதவியை கோரினார். கோவையில் உள்ள ராணுவ பொறியாளர் பிரிவை சேர்ந்த வீரர்களும், பெங்களூருவில் இருந்து  கமாண்டோ வீரர்களும் விரைந்துள்ளனர்.  இன்று காலை அவர்கள் வாலிபரை மீட்கும் பணியை தொடங்க உள்ளனர்.கடந்த 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மலை இடுக்கில் பாபு சிக்கியுள்ளதால், அவரது உடல் நிலை மோசமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. ராணுவத்தினர் இன்று சம்பவ இடத்திற்கு சென்றால் மட்டுமே வாலிபரின் நிலை தெரியும் என்று எஸ்.பி. விஸ்வநாதன் தெரிவித்தார்.செல்பி எடுத்து அனுப்பினார்பாபு விழுந்த இடம் மலை இடுக்கு என்பதால், அந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால் அவர், தான் இருக்கும் இடத்தை செல்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்த பிறகுதான் அவர் சிக்கியிருக்கும் இடம் தெரிந்தது….

Related posts

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி

TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!