கேரளாவில் 12 மணி நேரத்தில் 2 கட்சி தலைவர்கள் படுகொலை: ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் 12 மணி நேரத்தில் 2 கட்சிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா அருகே மண்ணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷான் (38). கட்சி ஒன்றில் மாநில செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பைக்கில் வீட்டிற்கு சென்றபோது, காரில் வேகமாக வந்த கும்பல் பைக் மீது மோதியது. இதில், ஷான் தடுமாறி கீழே விழுந்தார். காரில் இருந்து இறங்கிய 4 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மீட்கப்பட்டு, கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணியளவில் அவர் இறந்தார். இந்த பீதி அடங்குவதற்குள் அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜ கட்சியின் மாநில செயலாளர் கொல்லப்பட்டார். ஆலப்புழா மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாசன் (40). பாஜ ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளராக இருந்தார். ஆலப்புழா நீதிமன்றத்தில் வக்கீலாகவும் பணியாற்றினார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலை 6 மணியளவில் 8 பேர் அடங்கிய கும்பல் இவரது வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை கண்ட அவரது மனைவி, தாயார் கதறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 12 மணி நேரத்தில் அடுத்த@டுத்து நடந்த இந்த கொலைகளால் கேரளாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆலப்புழா மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு கொலைகள் தொடர்பாக 50 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜஜி ஹர்ஷிதா அட்டல்லூரி தெரிவித்தார். நாட்டுக்கு ஆபத்து ஆலப்புழாவில்  நடந்த 2 கொலை சம்பவங்களுக்கும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ‘ஆலப்புழாவில் நடந்த 2 கொலை சம்பவங்களையும் வன்மையாக  கண்டிக்கிறேன். குற்றவாளிகளையும் அதன் பின்னணியில் செயல்பட்டவர்களையும்  போலீசார் உடனடியாக கைது செய்வார்கள். இது போன்ற சம்பவங்கள் நம்  நாட்டிற்கு ஆபத்தாகும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானும் கண்டனம் தெரிவித்துள்ளார்….

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை