கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் ரயில்களில் தமிழகத்திற்கு வரும் பயணிகளை பரிசோதிக்க முடிவு: ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏற்பாடு

சேலம்: கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால், தமிழகத்திற்கு ரயில்களில் வரும் பயணிகளை பரிசோதிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக வழித்தடத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சலும் பரவத் தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம், கோட்டையத்தில் ஜிகா வைரஸ் நோயாளிகளை கண்டறிந்துள்ளனர். அங்கு ஜிகா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் சுகாதார குழுவினரும், அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு  செல்லும் மக்களின் மூலம் மற்ற இடங்களுக்கும் ஜிகா வைரஸ் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காய்ச்சல் அறிகுறியுள்ளவர்கள், வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவின் அண்டை மாநிலமாக தமிழகம் விளங்குவதால், மாநில எல்லைப்பகுதிகளில் கேரளாவில் இருந்து வரும் நபர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கோவை மாவட்ட எல்லை ஆகிய இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரை சோதிக்கின்றனர். அதேபோல், ரயில்களில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தினமும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு 75க்கும் மேற்பட்ட ரயில்கள் வருகின்றன. இவற்றில் காய்ச்சல் அறிகுறியுடன் பயணிகள் வருவதை கண்டறிய, வழித்தடங்களில் உள்ள ஸ்டேஷன்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது, அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையை ரயில்வே நிர்வாகமும், அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையும் மேற்கொண்டது. தற்போது, அது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜிகா வைரஸ் பரவலை தடுக்க மீண்டும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாகவும், திருவனந்தபுரம், கொச்சுவேலி, எர்ணாகுளம், பாலக்காட்டில் இருந்து கோவை வழியாகவும் தமிழகத்திற்கு ரயில்கள் வருகின்றன. அதனால், தென் மாவட்ட வழித்தடத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஸ்டேஷன்களிலும், மேற்கு மாவட்ட வழித்தடத்தில் போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் சுகாதாரத்துறையினரை கொண்டு காய்ச்சல் அறிகுறியுடன் யாரேனும் ரயிலில் வருகிறார்களா? என பரிசோதிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.* காய்ச்சல் அறிகுறியுடன் பயணிக்கக்கூடாதுபரிசோதனை குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,”ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, காய்ச்சல் அறிகுறியுள்ளவர்கள், ரயில்களில் பயணிக்கக்கூடாது என்பதை அறிவுறுத்துகிறோம். ஆன்லைனில் பலரும் டிக்கெட் எடுக்கின்றனர். அதனால், ரயில் பயணத்தின்போது முகக்கவசம் இன்றி வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மீண்டும் ரயில் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு, காய்ச்சல் உள்ளதா? என்பதை அறியவுள்ளோம். இதற்காக மாவட்ட சுகாதாரத்துறையினர், ரயில்வே ஸ்டேஷனில் முகாம் அமைத்து சோதிக்க இருக்கின்றனர்,’’ என்றனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை