கொரடாச்சேரி அருகே எண்கண்கிராமத்தில் நானோ யூரியா செயல்விளக்கம்

நீடாமங்கலம் : கொரடாச்சேரி வேளாண் கோட்டம் எண்கண் கிராமத்தில் நானோ யூரியா செயல் விளக்கம் நடந்தது.திருவாரூர் மாவட்டம் கோரடாச்சேரி வேளாண் கோட்டம் எண்கண் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கிராமத்தில் வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் நானோ யூரியா செயல் விளக்கம் நடைபெற்றது. இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இவ்வாண்டு எண்கண் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு நானோ யூரியா இலை வழி தெளிப்பான் மூலம் செயல் விளக்கம் பாண்டியன் என்ற விவசாயி வயலில் செய்து காண்பிக்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் பயிர்கள் நல்ல விளைச்சல் தர உரங்களை பயன்படுத்துகின்றனர். மேலும் யூரியாவின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது.யூரியா விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும் அது நிலத்தின் வளத்தை பாதிக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை.அதற்கு மாற்றாக உர நிறுவனமான இப்கோ நானோ யூரியாவை கண்டுபிடித்துள்ளது. சாதாரண யூரியாக்களை பயன்படுத்தும் போது அதில் உள்ள 30 முதல் 35 சதவிகித தழைச்சத்து தான் இலைகளை சேரும் மீதமுள்ள தழைச்சத்து நிலத்தை மாசுபடுத்தும் மற்றும் வளிமண்டலத்தில் கலந்து வீணாகிவிடும். சாதாரண யூரியா இலைக்குள் சேர 8-9 மணி நேரம் ஆகிறது. ஆனால் நானோ யூரியா ஒரு மணி நேரத்தில் இலைக்குள் சென்றுவிடும். ஒரு ஏக்கருக்கு 125 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி திரவ நானோ யூரியாவை சாதாரண விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். இதனால் பயிர்களுக்கு தெளிக்கும் போது 80-90 சதவீத தழைச்சத்து பயன்படுத்தப்படும்.எனவே சுற்றுச்சூழல் மற்றும் மண்வளம் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் அதிகப்படியான உரங்களை மண்ணில் இடுவதினால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே நேரடியாக மண்ணில் உரங்களை இடுவதை விட இலை வழி தெளிப்பு செய்து மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம் என எடுத்துக் கூறுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சிவகுமார், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட எண்கண் கிராமத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் மயிலாண்டநாயகம் , அட்மா திட்ட அலுவலர்கள் சீனிவாசன், நிதி ஆகியோர் செய்திருந்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்