கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1206 கனஅடி

ஓசூர், அக்.21:கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்காக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 1,079 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,206 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 667 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று 560 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் மொத்த உயரமான 44.28 கனஅடியில், தற்போது 41.98 கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்து வருவதால், அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் துர்நாற்றத்துடன் நுங்கும், நுரையாக பாய்ந்தோடுகிறது. அணை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 1082 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 1,020 கனஅடியாக நீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.25 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

பாம்பாறு அணை நிரம்பியது
ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் பெய்யும் மழை காரணமாக, பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் முழு கொள்ளளவான 19.6 அடியில், நீர்மட்டம் 18.6 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 350 கனஅடி நீரும், அணையின் பாதுகாப்பு கருதி 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், பாம்பாற்று ஆற்றுப்படுகை வழியாக தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. எனவே, பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related posts

நள்ளிரவில் சவாரிக்கு சென்றபோது ரேபிடோ கார் டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

மாநகர பேருந்து மோதி ஆட்டோ நொறுங்கியது: பயணிகள் படுகாயம்

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய 500 தாழ்தள மின்சார பஸ்கள்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது