கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி: ரூ.3 கோடி நகை தப்பியது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி-காரப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்களின் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த பகுதியில் இன்று அதிகாலை சாமல்பட்டி காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ராமசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு கடன் சங்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த போலீசார், கூட்டுறவு கடன் சங்கம் அருகே சென்றனர். அப்போது அங்கிருந்து மர்மநபர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: இன்று அதிகாலை 2 மணியளவில் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வந்த மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். முன்னதாக நுழைவு வாயிலில் இருந்த கேமராவில் தங்களின் முகம் பதிவாகாமல் இருப்பதற்காக அதனை திருப்பி வைத்துள்ளனர். மேலும் அங்கிருந்த அலாரத்தின் ஒயரையும் துண்டித்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு, அதன் ஒயர்களை துண்டித்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள லாக்கரை அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரை மற்றும் வெல்டிங் மெஷினை கொண்டு உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரின் டார்ச்லைட் வெளிச்சத்தை கண்ட மர்மநபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து தப்பியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த ₹3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ₹5 லட்சம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்….

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது