கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டரை கண்டித்து வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

செங்கல்பட்டு:  கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). வழக்கறிஞர். நேற்று முன்தினம் மதியம் ஜெயபிரகாஷ், சக வழக்கறிஞர்களுடன் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு சாப்பாடு ஆர்டர் கொடுத்த பிறகு நீண்ட நேரமாக அவர்களுக்கு, உணவு பரிமாறவில்லை என்றும், அவர்களுக்கு பின்னர் வந்தவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள், உணவு பரிமாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயபிரகாஷ், ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அவர்கள் வழக்கறிஞர்கள் என அறிந்து கொண்ட ஓட்டல் உரிமையாளர், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு, தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் காவலர் சதீஷ் அங்கு சென்றார். அப்போது, ‘‘நீதிமன்றத்தில் இவனையெல்லாம்  நான் பார்த்ததே கிடையாது’’ என ஜெயபிரகாஷை ஒருமையில் பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் நந்தகோபால், யாரிடமும் விசாரிக்காமல் வழக்கறிஞர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி போல போலீஸ் வாகனத்தில் ஏற்றி, ‘‘வக்கீல் என்றால் பெரிய இவனா’’ என ஒருமையில் பேசியுள்ளார்.தொடர்ந்து அவரை காவல் நிலையத்தில் அழைத்து சென்ற போலீசார், அங்கு ஜெயபிரகாஷை கைதி போல் நிறுத்தி காவலர்கள் பாஸ்கர், சதாசிவம், சதீஷ் ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், புகார் குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் அவரை விடுவித்தனர். இதையடுத்து அவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்பு, இதுகுறித்து செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சொக்கலிங்கம் செயலாளர் ஆனந்தீஸ்வரன் உள்பட  100க்கும் மேற்ப்பட்டோர் நீதிமன்றம் அருகே நேற்று காலை திரண்டனர். அங்கு, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் சதாசிவம், சதீஷ் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களை அவதூறாக ஒருமையில் பேசி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், இச்சம்பவம் குறித்து எஸ்பி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்ற பணியை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம். அப்போதும், நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களது போராட்டம் பெரிய அளவில் நடத்துவோம் என்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி