கூடலூர் வனப்பகுதியில் தரை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்: வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

கூடலூர்: கூடலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் குடிநீர் தேடி ஊருக்குள் வருவதை தடுகக் தரைத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேகமலை வன சரணாலயத்தில் உள்ளது கூடலூர் வனச்சரகம். இது குமுளி, அமராவதி, செல்லார்கோவில், லோயர்கேம்ப், மங்கலதேவி, வண்ணாத்திப்பாறை (மே), வண்ணாத்திப்பாறை (கி), மாவடி, கப்பாவுமடை, பெருமாள்கோவில், சுரங்கனார் உள்ளிட்ட 11 பீட்டுகளை கொண்டது. இந்த வனப்பகுதியில் மான், யானை, காட்டுமாடு போன்ற விலங்குகள் அதிகளவில் உள்ளன. கோடை காலங்களில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர் வற்றி விடுவதால் வனவிலங்குகள் குடிநீர் தேடி, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் நுழைந்து விடுவதால் பயிர்கள் சேதமடைகிறது. இதனால் குடிநீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதை தடுக்கும் விதமாக, வனத்துறையினர் காப்புக்காடு பகுதிகளில் உள்ள தரைத்தொட்டிகளில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்புவர்.இந்நிலையில் மேகமலை வன உயிரின காப்பாளர் உத்தரவின் பேரில், கூடலூர் ரேஞ்சர் அருண்குமார் தலைமையில், வனவர் சிவலிங்கம், வனக்காவலர்கள் வனராஜ், மோடீஸ்வரி உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று டிராக்டரில் சின்டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் கொண்டு சென்று மங்கலதேவி பீட்டில் வனப்பகுதியில் உள்ள தரைத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பினர். இதுகுறித்து ரேஞ்சர் அருண்குமார் கூறுகையில், ‘வனவிலங்குகளுக்கு மழைக்காலங்களில் போதிய குடிநீரும், இயற்கை உணவு வகைகளும் வனப்பகுதியில் கிடைத்து விடுகிறது. ஆனால் கோடை காலங்களில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர் வற்றிவிடுவதால் வனத்தை விட்டு வெளியேறுகிறது. தற்போது வனப்பகுதியில் தரைத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவதால் வனவிலங்குகள் குடிநீர் தேடி ஊருக்குள் வருவது தடுக்கப்படும். கோடைகாலம் முடியும் வரை தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்….

Related posts

தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 9000-ஐ தாண்டியது: தொழில்துறை தகவல்

ரயில் நிலைய மறுசீரமைப்பு: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்காத வகையில் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்