கூடலூர் மக்களின் கோரிக்கையால் நடவடிக்கை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது பழமையான ஈஸ்வரன் கோயில்

கூடலூர் : கூடலூர் தாமரைக்குளம் பகுதியில் பழமை மிகு ஈஸ்வரன் கோவில் உள்ளது. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலை கூடலூர், கம்பம், பாளையம் உள்ளடக்கிய பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பூஞ்சாறு அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாறு தம்பிரான் கட்டியதாக கூறுவர். இந்த கோயிலுக்கு எதிரே தெப்பக்குளமும், கோயிலுக்கு சொந்தமான நிலமும் உள்ளது.  தம்பிரான் குடும்பத்தினர் இப்பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற பிறகு கோயிலையும், நிலத்தையும் அங்கு பூஜை செய்த சுவாமியின் குடும்பத்தினரே பரம்பரையாக கவனித்து வந்துள்ளனர். பழமைவாய்ந்த இக்கோயிலை புனரமைக்க யாரும் முன்வராததால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோயிலை பராமரித்து வந்த சுவாமியின் குடும்பத்தினரும் வருவாய் குறைவால் கூடலூரைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர். அதன் பிறகு பக்தர்கள் செவ்வாய், வெள்ளியன்று கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர். இந்நிலையில், சிதிலமடைந்த கோயிலை இந்து அறநிலையத் துறையினர் மீட்டெடுத்து புனரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கூடலூர் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்  கீழக்கூடலூர் ஈஸ்வரன் கோயிலை இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஆட்சேபனை ஏதும் இருப்பின் ஒருவார காலத்திற்குள்  உதவி ஆணையர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோட்டீசை கோயில் மதிலிலும் ஒட்டி உள்ளனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்