கூடலூர் பகுதியில் உலர வைக்கப்பட்ட காப்பி கொட்டைகள் கிலோ ரூ.150க்கு விற்பனை

 

ஊட்டி,ஜன.20: கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் காப்பி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், உலர வைக்கப்பட்ட தோல் நீக்கப்படாத காப்பி கொட்டைகள் கிலோ ரூ.150 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை,மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ஊடுபயிராக காய்கறிகளும்,பழ வகைகளான ஆரஞ்சு,பேரிக்காய் உள்ளிட்டவை மற்றும் காப்பி செடிகளையும் பயிரிடப்படுகிறது.

கூடலூர்,கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் ஊடுபயிராக அல்லாமல் பல ஏக்கர் பரப்பளவிலும், குன்னூர், மஞ்சூர், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை செடிகளுக்கு நடுவே ஊடு பயிராக காப்பி பயிரிடப்பட்டு உள்ளன. இதன் மூலம் தேயிலை மூலமாகவும், காப்பி மூலமாகவும் விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்து வருகின்றன. நீலகிரியில் கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக காப்பி விளைச்சல் அதிகரித்துள்ளது.குறிப்பாக கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள காப்பி தோட்டங்களில் உள்ள செடிகளில் பூக்கள் பூத்தும், பல செடிகளில் காப்பி காய்கள் காய்த்தும் குலுங்குகின்றன.

காப்பி கொட்டைகள் நன்கு விளைந்து கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் காப்பி கொட்டைகள் காய்த்துள்ளன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து தோல் நீக்காமல் நன்கு காய வைத்து காப்பி தூள் தயாரிக்கும் அளவிற்கு பக்குவப்படுத்தி சேமித்து வைக்கின்றனர். நன்கு காய்ந்த காப்பி கொட்டைகளை எடுத்து குலுக்கி பார்த்தால் உட்புறம் காப்பி கொட்டைகள் சத்தம் எழுகின்றன.

இவற்றை காப்பி தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி செல்கின்றனர். தற்போது கிலோவிற்கு ரூ.150 வரை விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர். இதுதவிர பச்சை காயாக இருக்கும் காப்பி கொட்டைகளை கிலோவிற்கு ரூ.50 வரை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்