கூடலூர் அருகே தாயை பிரிந்த குட்டி யானை மீண்டும் சேர்ப்பு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சரகத்தில் உள்ளது கோல்டு மைனஸ் வனப்பகுதி. இங்கு நேற்று முன்தினம் காலை ஒரு வயதான பெண் குட்டி யானை தாயை பிரிந்து தனியே சுற்றித்திரிந்தது. தகவலறிந்து வனத்துறையினர் சென்று குட்டியானையை மீட்டனர். அதற்கு கால்நடை மருத்துவர் அறிவுரைபடி, தாவர மரபியல் பூங்காவில் தங்கி இருந்த பாகன்களின் உதவியோடு லக்டோஜன் பால் மற்றும் குளுகோஸ் வழங்கினர். பின்னர், சிறிய குழியில் விட்டு தாய் யானை குட்டியை தேடி வருகிறதா என  கண்காணித்தனர். மதியம் வரை குட்டியின் சத்தத்திற்கு தாய் வரவில்லை. இதனையடுத்து, தாய் யானை இருக்கும் இடத்தை தேட ஒரு குழு அனுப்பப்பட்டது.   மாலை 5 மணி அளவில் சோலை காட்டில் இருந்து யானை கூட்டம் ஒன்று வந்தது. அதில், இருந்த தாய் யானை,  குட்டியை கண்டுபிடித்து மெல்ல பிளிறியது. குட்டியும் தாயை அடையாளம் கண்டு பிடித்து விட்டது.  இதை அறிந்த வனத்துறையினர் குட்டி யானையை கால்நடையாகவே தாய் யானை இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். தாய் யானை அருகே சென்றதும் குட்டியை விரட்டி விட்டனர். அது வேகமாக ஓடிச்சென்று தாய் யானையோடு சேர்ந்து கொண்டது. இதனை அடுத்து,  குட்டியை பத்திரமாக காட்டு யானைகள் கூட்டிச் சென்றது. இருட்டானதால் யானையை கண்காணிக்க முடியவில்லை. யானை கூட்டத்துடன்  குட்டி  உள்ளதா என வனத்துறை பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு