குழந்தை பெற சுகப்பிரசவத்தை தவிர்த்து அறுவை சிகிச்சைக்கு மாறும் இளம்தலைமுறை: மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: குழந்தை பெற்றுக்கொள்ள இளம் தலைமுறையினர் தற்போது சுகப்பிரசவத்தை தவிர்த்து அறுவை சிகிச்சை முறைக்கு மாறுகின்றனர்.  நவீன மயமாக்கப்பட்ட மருத்துவமுறை என்றாலும் இது நல்லது அல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமிழகத்தில் 50 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் 5 குழந்தைகளில் இருந்து 10 குழந்தைகள் வரை பெற்றெடுத்தார்கள். இந்த பிரசவ முறை அனைத்தும் பெரும்பாலும் சுகப்பிரசவமாகவே இருந்தது.  காலப்போக்கில் ஒவ்வொரு வீட்டிலும் 3 குழந்தைகள், பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலையில், பின்பு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பார்ப்பது அரிதாகிவிட்டது.  இதற்கு குடும்ப சூழ்நிலை, குழந்தைகளின் படிப்பு செலவு, தனிநபர் வருமானம், உணவு பழக்க வழக்க முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். மேலும், குழந்தை பெற்றெடுப்பது என்பது பெண்களுக்கு மறுபிறவி என கூறுவர். 30 வருடங்களுக்கு முன்பு வரை அறுவை சிகிச்சை என்றால் பொதுமக்கள் பயந்து வந்த காலகட்டம் மாறி, தற்போது இளைய தலைமுறையினரே எங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் என தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பலவிதமான காரணங்களையும் அவர்கள் முன்வக்கின்றனர். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் முடிந்தவரை குழந்தை பெற்றுக்கொள்ள வரும் பெண்களுக்கு நார்மல் டெலிவரி பார்க்கப்படுகிறது. அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை முறையே பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் தனியார் மருத்துவமனைகள் அதிகப்படியான வருமானம் ஈட்டுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவமனை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட காலம் மாறி தற்போது கடந்த இரண்டு வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ள போகும் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நல்ல நேரம் பார்த்து, எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என சொல்கின்றனர். இதுகுறித்து பெரம்பூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் வீட்டிற்கு 2 அல்லது 3 பெண் பிள்ளைகள் இருப்பார்கள். அவர்கள் பிரசவத்திற்கு வரும் போது அவர்களது பெற்றோர் நார்மல் டெலிவரி தான் வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு பெண் பிள்ளை மட்டுமே உள்ளது. அதனை எவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர் அதனால் எனது பிள்ளை பிரசவ வலி தாங்காது அதனால் ஆப்ரேஷன் மூலம் குழந்தையை எடுத்து விடுங்கள் என்று கூறுகின்றனர். இன்னும் சில பேர் அம்மாவாசை. அஷ்டமி நவமி போன்ற நாளில் பிரசவம் வேண்டாம் என்றும், சுபமுகூர்த்த நாளில் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளதா எனவும் வாய் கூசாமல் கேட்கின்றனர் அந்த அளவிற்கு இயற்கையாக நடைபெற்ற விஷயங்கள் அனைத்தும் தற்போது நவீன மயமாக்கப்பட்ட மருத்துவ முறையில் செயற்கையாக மாறிக்கொண்டு வருகின்றன. இதனால் சில நேரங்களில் பிரசவத்தின்போது குழந்தைக்கும், தாய்க்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதனை தவிர்க்க சில தனியார் மருத்துவமனைகள் பணத்திற்காக அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்த வேண்டும்,’’ என தெரிவித்தார்.சகிப்புத்தன்மை இல்லை ஆர்.எஸ்.ஆர்.எம் குழந்தைகள் நல மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் சாந்தி இளங்கோவன் கூறுகையில், ‘‘தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள வரும் பெண்களுக்கும் சரி, அவர்களது பெற்றோருக்கும் சரி சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. ஒரே பெண் செல்லமாக வளர்த்து விட்டோம் என்று கூறி சாதாரண டெலிவரிக்கு கூட பயப்படுகின்றனர். நாங்கள் அவர்களை சமாதானப்படுத்தி நார்மல் டெலிவரி செய்து அனுப்பி வைக்கிறோம்.பெண்கள் 25 வயதிலிருந்து 30 வயதிற்குள் டெலிவரிக்காக வரும்பது வரும்போது அவர்களின் உடல் தன்மையை வைத்து சாதாரண டெலிவரியாக அதிக வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றால் குறைந்தது 3 ஆண்டுகள் வரை அடுத்த குழந்தைக்காக கால அவகாசம் தரவேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் போது முதுகுத் தண்டில் போடப்படும் ஊசியால்  பெண்களுக்கு காலம் முழுவதும் வலி இருக்கும் என ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது.அது முற்றிலும் பொய். நவீன மருத்துவ உலகில் தற்போது இதுபோன்ற தவறான கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் ஒருபோதும்  டெலிவரிக்கு வரும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் கூற்றுக்கு ஏற்ப அறுவை சிகிச்சைகள் செய்வது கிடையாது.குழந்தை பெற்றுக்கொள்ள போகும் பெண்ணின் உடல்நிலை மற்றும் குழந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  600 கிராம் 800 கிராம் போன்ற எடைகளில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பத்திரமாகக் காப்பாற்றி நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம். குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இயற்கையான நடைமுறை அதனை ஒரு போதும் செயற்கையாக்கி விட கூடாது,’’ என்றார்.அவசியம் இருந்தால் மட்டும் சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் குழந்தைகள் நல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜலட்சுமி கூறுகையில், ‘‘எங்களது மருத்துவமனைக்கு வரும் பெண்களில் 60% பேருக்கு நார்மல் டெலிவரி ஆகும். 40% பேர் அறுவை சிகிச்சை முறையிலும் குழந்தை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார மையங்களில் தொடர்ந்து சிகிச்சைகள் பெற்று அங்கு குறிப்பிட்ட அந்த நபருக்கு பிரசவம் பார்ப்பதில் ஏதாவது சிக்கல் இருந்தால் எங்களது மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். குழந்தை பிறக்கும்போது அம்மாவின் வயிற்றில் தண்ணீர் குறைவாக இருப்பது கொடி சுற்றி இருப்பது  மேலும் சில காரணங்களால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர். எங்களது மருத்துவமனையில் எப்போதும் பிரச்னைக்குரிய டெலிவரிகள் அதிகமாக நடக்கும். குறிப்பாக எடை குறைவான குழந்தைகள், குறைமாத குழந்தைகள் போன்ற குழந்தைகள் பிறக்கும் போது அதனை பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் வைத்து குழந்தை நல்ல நிலை  வந்த பின்புதான் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைக்கிறோம். மேலும் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களின் வயது உடல் தகுதி போன்றவற்றை வைத்து குழந்தையின் உடலை முன்கூட்டியே அறிந்து தேவையென்றால் அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைத்து அதன்மூலம் தாயும், சேயும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்படுகிறார்கள். இந்தியாவில் பெண்களின் பிரசவத்தின் போது  குழந்தைகள் குறைவான அளவில் இறக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது,’’ என்றார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்