குழந்தை பெற உரிய சிகிச்சை அளிக்காத கருத்தரிப்பு மையத்திற்கு ₹5 லட்சம் அபராதம்

திருவாரூர், ஜூலை 7: திருவாரூரை சேர்ந்த பெண்ணுக்கு உரிய முறையில் சிகி ச்சை அளிக்காத திருச்சி கருத்தரிப்பு மையத்திற்கு ரூ.5 லட்சம் நுகர்வோர் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூர் வில்வனம்படுகை பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன் மனைவி விஜயா. இவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத நிலையில் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக் கொடுப்பதாக வெளியான விளம்பரத்தையடுத்து திருச்சி புத்தூர் ஈ.வி.ஆர் ரோட்டில் இயங்கி வரும் தனியார் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவரை மேற்படி விஜயா கடந்தாண்டு நவம்பர் மாதம் அணுகியுள்ளார். முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக உடனடியாக ரூ.98 ஆயிரம் செலுத்த மையத்தின் நிர்வாகி சர்மிளா தெரிவித்துள்ளார். தொகையை விஜயா செலுத்தினார். தொடர்ந்து கருமுட்டைக்காக ரூ.69 ஆயிரம் மற்றும் சிகிச்சை என பல்வேறு வகைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்து 318 ரொக்கத்தை விஜயா செலுத்தியதாக கூறப்படுகிறது. இறுதியாக விஜயாவின் வயிற்றில் வைக்கப்பட்ட கருமுட்டை வளர்ச்சி இல்லாததன் காரணமாக குழந்தை உருவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயா திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி வழக்கு தொடர்ந்தார். வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.

செயற்கை கருவூட்டல் முறையில் பலன் கிடைக்காத விஜயவிற்கு அவர் செலுத்திய தொகை ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்து 318 மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.5 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.9 லட்சத்து 44 ஆயிரத்து 318யை வழக்கு தாக்கல் செய்த தேதி முதல் ஒரு சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் விஜயாவிற்கு வழங்க வேண்டும் என மேற்படி கருத்தரித்தல் மையத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்ற ஆணையர் சேகர் மற்றும் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை