குழந்தைகள் எண்ணத்தில் அச்சம் மறைய கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பு

திருச்சி: திருச்சி மாநகர காவல்துறையில் 14 சட்டம்,ஒழுங்கு காவல் நிலையம், 6 குற்றப்பிரிவு, 6 மகளிர் காவல் நிலையம், மாநகர குற்றப்பிரிவு, தெற்கு, வடக்கு போக்குவரத்து, சைபர் கிரைம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட காவல் பிரிவுகள் உள்ளது. தற்போது திருச்சியில் வாடகை மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்கள் சொந்த கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதில் ஸ்ரீரங்கம், தில்லை நகர், எ.புதூர். கே.கே.நகர், பாலக்கரை, அரியமங்கலம், பொன்மலை, உறையூர், காந்திமார்க்கெட், ஏர்போர்ட் ஆகிய காவல் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் நவீன காவல்நிலையமாக செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை, கோர்ட், கன்டோன்மென்ட், கோட்டை ஆகிய காவல் நிலையங்கள் எவ்வித வசதியின்றி உள்ளது. இதில் கோட்டை காவல் நிலையத்திற்கு சிந்தாமணி பகுதியில் காவலர் குடியிருப்பு பகுதியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆனாலும் தற்போது வரை அரசு மருத்துவமனை, கோர்ட் ஆகிய காவல் நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக மருத்துவமனை டாக்டர்களே தடையாக உள்ளனர். இதற்கிடையில், அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வருபவர்களை வரவேற்கும் வரவேற்பாளர் அதிர்ந்து பேச கூடாது, மரியாதையாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்தாரர்களிடம் புகார்களை நேரிடையாக சென்று விசாரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகரில் உள்ள 6 மகளிர் காவல்நிலையங்களிலும் குடும்ப வழக்குகள் அதிகளவில் வருகிறது. இதில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனை போக்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு காவல் நிலையம் என்ற பயமும், வேற்றுமையும் மறைவதற்காக திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல்நிலையத்தின் முன் பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கான பொழுது போக்கு அம்சங்களான ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் குழந்தைகள் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக இந்த விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். இதுபோல் ஸ்ரீரங்கம் சட்டம்,ஒழுங்கு காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜிஹெச் காவல் நிலையத்திற்கு கட்டடம் கட்டப்படுமா?மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மாற்றம் ஏற்படுத்தும் காவல் அதிகாரிகள், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. புறக்காவல் நிலையமாக இருந்த அரசு மருத்துவமனை காவல் நிலையமாக மாற்றப்பட்டு வருடங்கள் ஓடினாலும், எவ்வித வசதி இல்லாமல் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் இயங்கி வருவது வேதனை அளிக்கிறது. இங்கு கட்டிடம் கட்டுவதற்காக அப்போதைய டீன் வள்ளிநாயகம் அனுமதி அளித்த நிலையில் அவர் மாற்றலாகி சென்ற பின் எந்த டீனும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்….

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்