குழந்தைகளுக்கு அதிக ஆபத்து: அக்டோபரில் 3வது அலை உச்சமடையும்: ஒன்றிய அரசுக்கு நிபுணர்கள் குழு எச்சரிக்கை

புதுடெல்லி:  வரும் அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சம் பெறும் என்றும், இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்றிய அரசை எச்சரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்புக்களையும், இழப்புக்களையும் ஏற்படுத்தியது. தற்போது தான் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத்தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களிலும் முழுதளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சம் பெறலாம் என நிபுணர்கள் குழுவினர் ஒன்றிய அரசை எச்சரித்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் தாக்கலாம் என கருதப்படுகின்றது. எனவே குழந்தைகளுக்காக மருத்துவ வசதிகளை அதிகரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர் குழு பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சம்பெறலாம். அதனை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்.  தேவையான முன்னேற்பாடுகளை செய்வது அவசியமாகும். மூன்றாவது அலை காரணமாக அதிக அளவிலான குழந்தைகளை தொற்று பாதித்தால் மருத்துவர்கள், ஊழியர்கள், வென்டிலேட்டர்க்ள மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட தேவையான குழந்தைகள் நல மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். நாட்டில் தற்போதுள்ள உள்கட்டமைப்பானது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமானதாக இல்லை. தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் உடல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது அவசியமாகும். முழுமையான வீட்டு பராமரிப்பு மாதிரி, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை அதிகரித்தல் மற்றும் குழந்தைகள் மனநலப்பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டுகளை உருவாக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘160 நாட்களில் குறைவு’நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான கொரோனா பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் ஒரு நாள் புதிய பாதிப்பு 25,072 ஆக உள்ளது. இது கடந்த 160 நாட்களில் மிக குறைவாகும். மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3 கோடியே 24 லட்சத்து 49 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 389 பேர் உயிரிழந்த நிலையில்,  கொரோனா மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 34 ஆயிரத்து 756ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 3 லட்சத்து 33 ஆயிரத்து 924 ஆக குறைந்துள்ளது. இது 155 நாட்களில் மிக குறைவாகும். குணமடைவோர் சதவீதம் 97.63ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை 7 மணி வரை 58.25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு