குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த விவகாரத்தில் மாணவன் இறப்புக்கு காரணமாக யார் இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ் குமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தங்கோடு என்கிற ஊரில் செயல்பட்டு வரும் கிருஷ்ண மாயா வித்யாலயா என்கிற உயர்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 24ம் தேதி அஸ்வின் என்கிற மாணவன் பள்ளி வளாகத்திற்குள் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து ஒரு மாணவன் கொடுத்ததை குடித்தான். அந்த மாணவன், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி அந்த மரணம் அடைந்திருக்கிறார். இவ்வளவு நாட்களாகியும் அந்தக் கொலைக்கு காரணமான நபர்களை காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. எனவே, தவறு செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.  இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: முதல்வரின் உத்தரவுபடி எங்களுடைய சிஇஓ மூலம் அறிக்கை வாங்கியிருக்கின்றோம். போலீசார் சொல்வது என்னவென்றால், அந்த அஸ்வின் என்கிற மாணவன், 12.30 மணி அளவில் ரெஸ்ட் ரூமுக்கு சென்றிருந்தபோது யாரோ ஒருவன் யூனிபார்ம் போட்டு கொண்டு வந்து குளிப்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அது யார் என்று கண்டுபிடிக்கின்ற பணியில் காவல் துறை முழுமையாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது. உறுப்பினர் சில கருத்துகளைச் சொன்னார், இழப்பீட்டையும் கேட்டார். இவையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். பொதுவாக, இது போன்ற நிகழ்வுகள் பள்ளிகளில் நடக்கும்போது, சிபிசிஐடிக்கு உடனடியாக நாங்கள் உத்தரவிடுவோம் என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். இதுவும் அதற்குப் பொருந்துகின்ற வகையில், முதல்வர் உடனடியாக அதற்காக உத்தரவிட்டிருக்கிறார். எனவே இது குறித்து கவலைப்பட வேண்டாம். அது எந்தப் பள்ளியாக இருந்தாலும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பள்ளியாக இருந்தாலும், நம்முடைய மாநில மாணவர் என்கிற முறையில், அவர் உயிரிழந்ததற்கு யார் காரணமாக இருந்தாலும், அந்தப் பள்ளியின் மீது அரசின் சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்:  2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது  தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்