குளிருடன் காய்ச்சல் இருந்தால் பரிசோதனை அவசியம் சுத்தமான நீர்நிலைகளில் வளரக்கூடிய மலேரியா கொசுவை அழிப்பது எப்படி?சுகாதார ஆய்வாளர்கள் விளக்கம்

செய்யாறு : சுத்தமான நீர்நிலைகளில் வளரக்கூடிய மலேரியா கொசுக்களை அழிப்பது எப்படி என்பது குறித்து செய்யாறு அருகே காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் விளக்கமளித்தனர்.செய்யாறு அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பூதேரி புல்லவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு முகாம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். முகாமில், சுகாதார ஆய்வாளர்கள் சம்பத், துரைபாபு ஆகியோர் பேசியதாவது:மலேரியா ஒட்டுண்ணி பெண் அனோபிலிஸ் வகை கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. நோய் ஒட்டுண்ணி உள்ள கொசுக்கள் ஆரோக்கியமான மனிதனை கடிக்கும்போது காய்ச்சலை ஏற்படுத்துகிறது. அவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வளரும். மேல்நிலை, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள், தூக்கி எறியப்பட்ட பொருட்களில் தேங்கியுள்ள மழைநீர் போன்ற இடங்களில் வளர்கிறது.5 முதல் 7 நாட்கள் வரை காய்ச்சல் மற்றும் குளிருடன் கூடிய நடுக்கம், உடல்வலி, தலைவலி, வாந்தி, சிறுநீர் பிரியாத நிலை, கடும் வயிற்றுப்போக்கு, மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு, கடும் நீரிழப்பு, ரத்தசோகை, அதிகமான காய்ச்சல், நினைவிழத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு, மாத்திரைகளை இலவசமாக பெறலாம்.ஒருவருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மலேரியா காய்ச்சல் வரலாம். இதனை தடுக்கும்விதமாக தூங்கும்போது கொசு வலை கட்டி உறங்குதல், வீட்டில் உள்ள கதவு ஜன்னல்களை கொசு புகாதவாறு வலை போடுதல், கொசு விரட்டிகளை பயன்படுத்துதல், தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகள், பாத்திரங்கள், கொசுக்கள் புகாமல் மூடிவைக்க வேண்டும்.வாரம் ஒருமுறை தொட்டிகளை கழுவி உலர வைத்தல், நீர்நிலைகளில் கொசுப்புழுக்களை உண்ணும் கம்பூசியா மீன்களை விடுதல், தொட்டிகளில் வாரம் ஒருமுறை டெமிபாஸ் மருந்து ஊற்றுதல், முதிர் கொசுக்களை புகை மருந்து அடித்து ஒழித்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை