குலசேகரம் அருகே வீட்டில் மதுபாட்டில் பதுக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது

குலசேகரம், செப்.28: குலசேகரம் சுற்றுவட்டார பகுதியில் சிலர் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சுகண்டறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது, அந்த வீட்டில் ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த றாபி (50) மற்றும் அவரது மனைவி சரோஜினி (49) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் இருவரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் றாபி, சரோஜினி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல் கொல்லக்குடிவிளை அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்தவர் பிரபு குமார் (44). கூலித்தொழிலாளி. இவரும் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடம் இருந்தும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கண்ட இரண்டு சம்பவங்களில் மொத்தம் 180 மி.லி. கொண்ட 32 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்