குலசேகரன்பட்டினம் ஊரை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்லும் அரசு பஸ்சால் மக்கள் அவதி

உடன்குடி, செப். 6: குலசேகரன்பட்டினம் ஊரை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாகச் செல்லும் அரசு பஸ்சால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்களும், பொதுமக்களும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சமூகஆர்வலர் ரஹ்மத்துல்லா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தென்பகுதியின் கடற்கரை பகுதியில் வாழும் மக்களின் நலன் கருதி கன்னியாகுமரியில் இருந்து குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி காலை 9.15மணிக்கு குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்லும் அரசு ஏசி பஸ். இந்த பஸ்சினால் ஆன்மிக வழிபாட்டு ஸ்தலமான உவரி, குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் சில நாட்கள் அரசு பேருந்து ஊருக்குள் வராமல் பயணிகள், பக்தர்களை குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் இறக்கிவிட்டு சென்று விடுகிறது. இதனால் குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்கள் மற்றும் வெளியூர் செல்ல காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி அரசுப் பேருந்தை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு