குற்றச்செயலில் ஈடுபட்டாலும் சிறார்களிடம் கடுமை காட்டாமல் போலீசார் உளவியல் ரீதியாக சிறார்களை திருத்த வேண்டும்: சிறைத்துறை டிஜிபி, ஐகோர்ட் நீதிபதி கருத்து; இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்த ‘பறவை’

சென்னை: முதல் முறை குற்றச்செயலில் ஈடுபடும் சிறார்களை கையாளும்  நடைமுறைகள் கடுமையாக இல்லாமல், அவர்களை உளவியல் ரீதியாக கையாண்டு திருத்த காவல்துறையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ்  குமார் புஜாரி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையரகத்தில் உயர் நீதிமன்ற  நீதிபதி பிரகாஷ் மற்றும் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், ஆகியோர், பறவை திட்டம் குறித்து, சென்னை காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பினை நேற்று துவக்கி வைத்தனர். மேலும், பறவை திட்டத்தின் மூலம் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சென்னை காவல் மாவட்ட 12 துணை ஆணையாளர்கள் மற்றும்  32 உதவி ஆணையாளர்கள் என மொத்தம் 44 காவல் அதிகாரிகளுக்கு தன்னார்வ அமைப்பினர் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுவரை, பறவை திட்டத்தின் கீழ் 265 நபர்கள் சீர்திருத்தப்பட்டு, 213 இளைஞர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.நிகழ்ச்சியில்  சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் குமார் புஜாரி பேசுகையில், ‘‘முதல் முறை குற்றச்செயலில் ஈடுபடும் சிறார்களை கையாளும் நடைமுறைகள் கடுமையாக இல்லாமல் அவர்கள் உளவியல் ரீதியாக கையாண்டு திருத்த  காவல்துறையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். குற்றச்செயல் புரிந்தவர்களை 41 ஏ நோட்டீஸ் அனுப்பி விசாரித்து உரிய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்றார்.  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பேசுகையில், பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்ததாக காவல்துறையினர் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படுவதை குறிப்பிட்டு நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா, பல்வேறு வகையான முடித்திருத்தங்களை செய்துகொண்டதில்லையா, அந்த காலத்து நடிகர்கள் போல பெல்பாட்டம் பேண்ட் அணிந்து ஸ்டைல் காட்டியதில்லையா என நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். காவல்துறையினர் குற்றச் செயல் புரிந்த சிறார்களை திருத்தி நல்வழிப்படுத்துவதிலேயே மகிழ்ச்சி காணவேண்டும். வெறும் புள்ளி விவரங்களுக்காக மட்டும் வழக்குகள் பதிவு செய்வதை காவல்துறையினர் கைவிட வேண்டும் என்றும் கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை