குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரம்

திருச்சி, ஜூலை 9: குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தின்கீழ் 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர். திருச்சி மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன வட்டாரங்களான அந்தநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, மண்ணச்சநல்லூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 6,500 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சாகுபடி திட்டத்தில் ரூ.2,466 மதிப்பிலான இடுபொருட்கள் முழு மானியத்தில் யூரியா 45 கிலோ, டிஏபி 50 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோ என விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

உரங்களை வழங்கி அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘சரியான பருவ மழை இருக்குமானால் புன்செய் சாகுபடி தான் விவசாயிகளுக்கு சிறந்தது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை முழுவதுமாக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வாங்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்கு அரசாங்கம் பங்கு பெறுகிறது. விளைவிக்கின்ற நெல்லை முழுவதுமாக அரசே கொள்முதல் செய்து கொள்ளும்’ என்று கூறினார்.
அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கி முழு கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனைக் காக்க முதல்வர் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த குறுவை சாகுபடியை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி அமோக விளைச்சலை விளைவிக்குமாறு வாழ்த்துகிறேன்’ என்று கூறினார். நிகழ்ச்சியில், திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், அப்துல் சமது, டிஆர்ஓ அபிராமி, இணை இயக்குநர் (வேளா ண்மை) முருகேசன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை