குறுவை சாகுபடிக்கு ஆயத்தம் நாற்று விடுதல், உழவு பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரம்

திருவாரூர் : ஜூன் 12ல்   மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டாவில்   இந்தாண்டு 5.21 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற உள்ளது.  விதை நாற்று விடுதல் மற்றும்   நிலத்தை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.குறுவை   சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. டெல்டா   மாவட்டங்களில் இந்தாண்டு 5.21 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற   உள்ளது. கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்ல   வசதியாக ஆறு, கால்வாய்கள் தூர்வாரும் பணியும் தீவிரமாக நடந்து  வருகிறது. எனவே  குறுவை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன்  தயாராகி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் டிராக்டர் மற்றும் மாடுகள்  மூலம் நிலங்களை உழவு செய்யும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கால்நடைகளை  வளர்ப்போர் தங்கள் வீடுகளில்  சேரும் சாண குப்பைகளை கொண்டு வந்து,  உரத்துக்காக வயல்களில் கொட்டி  வருகின்றனர். போர்வெல் வசதி உள்ள  விவசாயிகள் அதிகளவில் நாற்றுகளை  விட்டு வளர்த்து வருகின்றனர். டெல்டாவில்  மொத்தம் சுமார் 90 ஆயிரம்  ஏக்கரில், இவ்வாறு விதை நாற்றுகளை விட்டுள்ளனர்.  இதுதவிர ஆறுகளில் தண்ணீர்  வந்த பின், விதை தெளித்து சாகுபடியை  துவக்குவார்கள்.   நாகை: நாகை  மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு  30  நிமிடத்திற்கும்  மேலாக மழை பெய்தது. ஏற்கனவே குறுவை சாகுபடி  பணிகளை தொடங்கிய  விவசாயிகளுக்கு இந்த மழை சற்று ஆறுதலாக அமைந்தது. இதேபோல்  மழை   நீடித்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் நல்ல மகசூல் பெறலாம் என  விவசாயிகள்   கூறினர்.120 டன் விதை நெல் கையிருப்புநாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம் கூறுகையில், நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 25 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய   இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான  விதைநெல் 120 டன் அரசு விதைப் பண்ணையில் கையிருப்பு உள்ளது. 650 டன்  தனியார் நிறுவனங்களில்   கையிருப்பு உள்ளது. யூரியா,  டிஏபி, பொட்டாஷ் போன்ற   உரங்கள் 10 ஆயிரம் டன் கையிருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும் என தெரிவித்தார்.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவுகாவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது. மேட்டூருக்கு நேற்று முன்தினம் 555 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 492 கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக, நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடியிலிருந்து 750 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 96.83 அடியாகவும், நீர் இருப்பு 60.80 டி.எம்.சியாகவும் உள்ளது….

Related posts

காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டம் 548 மனுக்கள் பெறப்பட்டன

வண்டலூர் தானியங்கி மழைமானி நிலையத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு