Friday, July 5, 2024
Home » குறிப்பறிதல்

குறிப்பறிதல்

by kannappan
Published: Last Updated on

குறளின் குரல்-126
திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் அதிகாரத் தலைப்புகள் 132 தான் என்பது பலர் அறியாத செய்தி. ‘ குறிப்பறிதல்’ என்ற ஒரே தலைப்பில் இரண்டு அதிகாரங்கள் உள்ளன. ஒன்று பொருட்பாலில் உள்ளது. இன்னொன்று காமத்துப்பாலில்

உள்ளது.பொருட்பால் குறிப்பறிதல் அரசியலைப் பேசுகிறது என்ற வகையில் நீதிகளைச் சொல்கிறது. காமத்துப்பால் குறிப்பறிதலோ காதலைப்பேசி இலக்கியச் சுவையோடு பயில்பவர்களைக் கவர்கிறது.‘இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கொன்று அந்நோய் மருந்து(குறள் எண் 1091)இவளது மைதீட்டப்பட்ட கண்களுக்கு இரண்டு பார்வைகள் உண்டு. ஒன்று காம நோயைக் கொடுக்கும். மற்றொன்று அந்த நோய்க்கு மருந்தாகும்.‘கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது’(குறள் எண் 1092)என்னை அந்தப் பெண் கடைக்கணித்துப் பார்க்கும் பார்வை காமத்தில் சரிபாதியானது அல்ல. அதைவிடப் பெரிது.‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்’(குறள் எண் 1093)தானே முன்வந்து என்னை நோக்கினாள். பின் நாணத்தோடு தலைகுனிந்து நின்றாள். அது அவள் கொள்ளும் காதலாகிய பயிர் வளர அவள் பாய்ச்சிய நீராகும்.‘யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்தான்நோக்கி மெல்ல நகும்’(குறள் எண் 1094)நான் அவளைப் பார்க்கும்போது அவள் தரையைப் பார்ப்பாள். நான் அவளைப் பார்க்காவிட்டால் என்னைப் பார்த்து மெல்லச் சிரிப்பாள்.இந்தக் குறளில் வள்ளுவரின் குறும்பு புலப்படுகிறது. ‘நான் அவளைப் பார்க்கும்போது அவள் தரையைப் பார்ப்பாள்.’ என்பது சரி. `நான் அவளைப் பார்க்காவிட்டால் என்னைப் பார்த்து மெல்லச் சிரிப்பாள்.’ என்பது எப்படிச் சரியாகும்?தலைவன்தான் தலைவியைப் பார்க்கவில்லையே? தான் பார்க்காதபோது அவள் தன்னைப் பார்ப்பாள் என்பதை அவன் எப்படிச் சொல்ல முடியும்?ஆக தலைவன் தலைவியைப் பார்க்காதிருப்பதுபோல் நாடகமாடுகிறானே தவிர, உண்மையில் கடைக்கண்ணால் அவன் அவளைப் பார்க்கத்தான் செய்கிறான்! நேற்று வரை நீயாரோ நான் யாரோ? இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?’ என்றொரு கண்ணதாசன் திரைப்பாடல். ‘வாழ்க்கைப் படகு’ படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பி.பி. னிவாஸ் பாடியது. அந்தப் பாடலில் இந்தக் குறளின் பொருளைத்தான் நயமாக எடுத்தாள்கிறார் கவியரசர்.’உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே!விண்ணைநான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும்?புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும்?’’குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்.’(குறள் எண் 1095)நேருக்குநேர் குறிவைத்துப் பார்க்கவில்லையே தவிர கண்களைச் சற்றுச் சுருக்கிக்கொண்டு பாராதவள் போலப் பார்ப்பாள் அவள்.’உறாதஅவர்போல் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.’(குறள் எண் 1096)தொடர்பே இல்லாதவர்கள் போலப் பேசிக் கொண்டாலும், அச்சொற்கள் உள்ளத்தில் பகை இல்லாத சொற்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.’செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.’(குறள் எண் 1097)பகையில்லாக் கடுஞ்சொல்லும் கோபம் கொண்டவர்போலப் பார்த்தலும் ஆகிய இரண்டும் புறத்தே அன்பில்லாதவர்போல் நடித்துக்கொண்டு உள்ளத்தே காதல் கொண்டவரின் குறிப்பாகும்.‘அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.’(குறள் எண் 1098)நான் ஏக்கத்துடன் அவளைப் பார்ப்பேன். அன்புடையவளாய் என்னைப் பார்த்து மெல்லச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பிலும் ஒரு தனி அழகிருக்கும்.‘ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள’(குறள் எண் 1099)முன்பின் அறியாத அயலார்போலப் பொதுநோக்கால் அன்பே இல்லாதவர் என்று தோன்றும்படி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுதல், காதலர்களிடையே காணப்படும் தன்மைதான்.‘கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல’(குறள் எண் 1100)கண்ணும் கண்ணும் பார்த்துக் கொள்ளும்போது காதலர்கள் கண்களாலேயே பேசிக் கொள்வதால், அங்கே வாய்ச் சொற்களுக்கு அவசியமே இல்லை.இந்தக் குறளுக்கு பரிமேலழகர், மு.வ., சுஜாதா என எல்லோரும் இந்த ஒரே பொருளையே காண்கிறார்கள். ஆனால் திருச்சி புலவர் ராமமூர்த்தி வித்தியாசமான கோணத்தில் இந்த அழகிய குறளை அலசி, அதற்கு இன்றைய காலத்திற்கேற்ற புதுப்பொருள் காண்கிறார். `கண்ணும் கண்ணும் பார்த்துக் கொண்டால் அவர்கள் உண்மையான காதலர்களாக இருப்பதால் எந்த மதம் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்டாயம் திருமணம் புரிந்துகொள்வார்கள். அந்தக் காதலை எதிர்த்து உறவினர்களோ நண்பர்களோ சொல்லும் வாய்ச்சொற்களால் எந்தப் பயனும் ஏற்படாது!’ என்கிறார் அவர்…*கம்ப ராமாயணத்தில் சீதையும் ராமனும் திருமணத்திற்கு முன்பாக முதல்முறையாகப் பார்த்துக் கொண்ட காட்சியைப் பற்றிய வர்ணனை வருகிறது. மிதிலை அரண்மனையில் உள்ள கன்னி மாடத்தில் சீதாதேவி தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். அப்போது விஸ்வாமித்திர முனிவர் முன்செல்ல, லட்சுமணனோடு ராமன் நடந்து சென்றுகொண்டிருந்தான். ராமன் சீதையைப் பார்க்க, சீதையும் ராமனைப் பார்த்தாள். அந்தப் பார்வைதான் அவர்களை ஒருவருக்கொருவர் காதல் வயப்பட வைத்தது.’எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழிகண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்றுஉண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிடஅண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்!’’பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்துஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்வரிசிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்’`மருங்கிலா நங்கையும் வசைஇல் ஐயனும்ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப்பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட பார்வை அவர்கள் இருவரிடமும் என்னென்ன மாற்றங்களையெல்லாம் தோற்றுவித்தது என்பதைக் கம்பர் அழகாக விளக்குகிறார். அந்தப் பார்வை காரணமாகவே இருவரும் தங்கள் இதயங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டு விட்டனர் என எழுதுகிறார் கம்பர்.புராணத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திலும் பார்வை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. அக்கினியிலிருந்து மூன்று மார்புக் குறிகளுடன் தோன்றியவள் மீனாட்சி. எந்த ஆண் அவளைப் பார்க்கிறபோது அவளின் ஒரு மார்புக்குறி மறைகிறதோ அவரே அவள் கணவன் என்கிறது அசரீரி. மீனாட்சி வளர்ந்து அரசாட்சி செய்கிறாள். பல நாடுகள்மேல் போர் தொடுத்து வெல்கிறாள். எட்டுத் திக்கும் வென்று இமயத்தையும் வென்றுவர அவள் சென்றபோதுதான் சிவபெருமானை முதல் முறையாகப் பார்க்கிறாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை அவள்மேல் பட்ட மாத்திரத்தில் அவளது மூன்று மார்பகங்களில் ஒன்று மறைந்து போயிற்று.தான் மணக்க வேண்டிய மணாளர் சிவனே என்றறிந்த மீனாட்சி நாணித் தலைகுனிந்தாள் என்றும் பின்னர்தான் மீனாட்சி கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது என்றும் சொல்கிறது புராணம்.காதல் பார்வை பற்றி மட்டுமல்ல, வேறு பல பார்வைகளைப் பற்றியும் புராணங்கள் பேசிச் செல்கின்றன. ராமாயணத்தில் சீதையைத் துன்புறுத்திய காகத்தின்மேல் ஒரு புல்லை அம்பாக்கிப் போடுகிறான் ராமபிரான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழி வந்தது அந்தக் கதையிலிருந்துதான்.ராமன் எய்த புல் காகத்தை விடாமல் துரத்துகிறது. சிவனிடமும் பிரம்மாவிடமும் மற்றுமுள்ள எல்லாத் தேவர்களிடமும் அடைக்கலம் தேடுகிறது அந்தக் காகம். யாரும் ராமனைப் பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. இறுதியில் ராமனையே சரணடைந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறது அது. ராமன் அதன் ஒரு கண்ணைத் தன் அம்பால் வாங்கி அதன் பார்வைச் சக்தியைக் குறைத்து அதை மன்னித்தான் என்கிறது ராமாயணம். தொலைதூரம் பார்க்கும் பார்வைச் சக்தி பெற்ற சம்பாதி என்ற கழுகைப் பற்றிய செய்தியும் ராமாயணத்தில் உண்டு. ஜடாயு என்ற கழுகின் தமையனான அதுதான், சீதை இலங்கையில் சிறையிருப்பதை கடலைத் தாண்டித் தன் பார்வையைச் செலுத்திக் கண்டுபிடித்துச் சொல்கிறது. அதன் பின்னர்தான், அனுமன் சமுத்திரத்தைத் தாண்டிப் போய் சீதையைக் காண்கிறான்.சிவபுராணத்தில் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்த ஒரு பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலானான் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.காதலுக்கு ஆதாரமாக இருப்பது பார்வை. முதலில் பார்த்துக் கொள்வதன் மூலம்தான் காதல் பிறக்கிறது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பல காதலன் காதலியின் பார்வை பற்றிப் பேசுகின்றன.’யார் நீ?’ என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் பாடல் ஒன்று டி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலிக்கிறது. ‘பார்வை ஒன்றுமட்டுமே போதும், வேறு எதுவும் வேண்டாம்’ என்கிறது அந்தப் பாடல்.’பார்வை ஒன்றே போதுமேபல்லாயிரம் சொல் வேண்டுமா…பேசாத கண்ணும் பேசுமாபெண்வேண்டுமா பார்வை போதுமா..பார்வை ஒன்றே போதுமே!’என வளர்கிறது அந்தப் பாடல்.’பார்த்தால் பசி தீரும்’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பி. சுசீலா பாடிய பாடல் ஒன்று பார்வையின் பெருமையைத்தான் பேசுகிறது.’பார்த்தால் பசிதீரும்பருவத்தில் மெருகேறும்தொட்டாலும் கைமணக்கும்தொட்ட இடம் பூமலரும்..’என்கிறது அந்தப் பாடல்.திருக்குறளில் காமத்துப் பாலில் ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரத்தில் காதலர்களின் பார்வையைப் பற்றி இலக்கிய நயத்தோடு அழகாகப் பேசுகிற திருவள்ளுவர், தாம் வாழ்ந்த காலத்திலேயே பலப்பல நூற்றாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையோடு திருக்குறளைப் படைத்திருக்கிறார் என்பதை நாம் அதைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது.(குறள் உரைக்கும்)தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

You may also like

Leave a Comment

19 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi