Monday, July 1, 2024
Home » குரு பகவானின் மீன ராசி சஞ்சாரப் பலன்களும், எளிய பரிகாரங்களும்..!

குரு பகவானின் மீன ராசி சஞ்சாரப் பலன்களும், எளிய பரிகாரங்களும்..!

by kannappan

ஐப்பசி 27ம் தேதிக்கு சரியான ஆங்கிலத் தேதி நவம்பர் 13, 2021 அன்று மகர ராசியை விட்டு, கும்ப ராசிக்கு மாறிய குரு பகவான், தனது அதிச்சார (Ahead of schedule) கதியில் பங்குனி 30 (ஏப்ரல் 13, 2022) அன்று கும்ப ராசியை விட்டு, மீன ராசிக்கு மாறுகிறார். அடுத்துவரும் தமிழ்ப் புத்தாண்டான சுபக்ருது ஆண்டு முடியும் வரையில், மீன ராசியிலேயே சஞ்சரிக்கின்றார்.கோள்சார விதிகளின்படி, ஒரு ராசியைக் கடப்பதற்கு, குரு பகவான் சுமார் 1 வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இருப்பினும், வான வெளியில் சதா வலம் வந்துகொண்டேயிருக்கும் வீரியம் நிறைந்த செவ்வாய், சுக்கிரன், சனி போன்ற கிரகங்களின் ஆகர்ஷண சக்தியினால், பாதிக்கப்படும்போது, குரு பகவானுக்கு இத்தகைய அதிச்சார மற்றும் வக்ர கதி மாறுதல்கள் நிகழ்கின்றன.    குருவிற்கு இத்தகைய அதிச்சார மற்றும் வக்ர கதி மாறுதல்கள் நிகழும்போது, அவரது சுபப் பார்வைகளின் கோண மாறுதல்களும் ஏற்படுகின்றன.மாறுபட்ட கருத்துகள்!மிகப் புராதனமான சில ஜோதிட நூல்களில், அதிசார, வக்ரகதிகளில் குருவுக்கு மட்டும் பூர்வ ராசிபலன் என்றும், மற்ற கிரகங்களுக்கு அவ்வப்போதுள்ள ஸ்தானப் பலன்கள் என்றும் கூறப்பட்டுள்ளன. இந்நூல்களுக்கு இணையான வேறு பல மிகப் பழைமையான கிரந்தங்களில், அதிசார, வக்ர கதிகளிலும்கூட குருவுக்கும் ஸ்தானபலம்தான் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குரு பகவானுக்கு ஸ்தான பலமும், பார்வை பலமுமே அதிக சக்திவாய்ந்தவை என்ற “பூர்வ பாராசர்யம்”  (மற்றைய அனைத்து ஜோதிட நூல்களுக்கும் முந்தைய, ஆதார நூல் என்ற பெருமை பெற்றது) கருத்தின்படி, இந்த குரு பகவானின் மீன ராசி சஞ்சார பலன்கள், மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, “தினகரன்” வாசக அன்பர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.குரு பகவானின் தற்போதைய மீன ராசி மாறுதல் அதிக முக்கியத்துவத்தை நம் ஒவ்வொரு வரின் வாழ்க்கையிலும் ஏற்படுத்துகிறது. கிரகங்கள் 9 என்றாலும், மக்கள் , குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கின் ராசி மாறுதல்களில் மட்டுமே அதிக ஈடுபாடும், கவலையும் கொண்டுள்ளனர்! இதற்கு என்ன காரணம்?  இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?மக்கள் வாழ்க்கையின் சுக துக்கங்கள், ஆரோக்கியம், ஆயுள், ஐஸ்வர்யம், குடும்ப வாழ்க்கை, வர்த்தகம் ஆகிய அனைத்தையும்  மேற்கூறிய நான்கு கிரகங்களே பெரும்பாலும் நிர்ணயிக்கின்றன.அதிலும், ஒவ்வொரு மனிதனின் குடும்ப வாழ்க்கையின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பவர்கள் குருவும், சுக்கிரனும் ஆவர். மனம் நிறைந்த குடும்ப வாழ்க்கை அமைவதற்கு குரு, மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் ஜனன கால ஜாதகத்தில் சுப பலம் பெற்றிருக்கவேண்டியது மிக, மிக அவசியமாகும் என்பதை “பிருஹத் ஸம்ஹிதை”, “பிருஹத் ஜாதகம்”, “உத்தர காலாம்ருதம்” போன்ற மிகப் புராதனமான, பிரசித்திப் பெற்ற ஜோதிட நூல்கள் தெளிவாக விளக்கியுள்ளன.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், கிடைத்தற்கரிய மாபெரும் பொக்கிஷம், உத்தம குணங்கள் நிறைந்த மனைவியே! ஜனனகால ஜாதகத்தில் குரு சுப பலம் பெற்றிருந்தால் மட்டுமே, கணவரின் மனத்தையறிந்து, அதற்கேற்ப குடும்பத்தை நடத்தும் பெண்ணை, மனைவியாகப் பெறமுடியும்!நல்ல இல்லறம் அமைவதற்கு ஜாதகத்தில், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் தோஷமற்று இருக்க வேண்டும். இருப்பினும், குரு அளிக்கும் மனைவிக்கும், சுக்கிரன் அளிக்கும் மனைவிக்கும் வித்தியாசங்கள் உண்டு!!சுருக்கமாகக் கூறுவதென்றால், முற்பிறவி களில் செய்துள்ள நற்செயல்களுக்குப் பரிசாகக் கிடைப்பதே உத்தமமான மனைவியாவார். “மனைவி அமைவதெல்லாம், இறைவன் கொடுத்த வரம்…!” எனக் கூறினாலும், நாம் செய்துள்ள புண்ணியத்தின் அடிப்படையில்தான்,  இந்த ஒப்பற்ற பரிசை இறைவன் நமக்களித்தருள்வான்.இதே அடிப்படையில்தான், ஒரு பெண்ணிற்கும் நல்ல கணவன் அமைவதும்!  முற்பிறவிகளில் ஓர் பெண் தெய்வபக்தியுடன் நற்செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவற்றிற்குப் பரிசாக இப்பிறவி யில் அன்பும், ஒழுக்கமும், பொறுப்புணர்வும், ஆரோக்கியமும் கொண்ட கணவர் அமைவார். இதுவும், பெண் ஜாதகத்தில் குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின்  சஞ்சார நிலைகளைப் பொறுத்தே அமையும்.ஆதலால்தான், குரு மற்றும் சுக்கிரனின் ராசி மாறுதல்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்! இதுவரையில், கும்ப  ராசியில் வலம் வந்துகொண்டிருந்த குரு பகவான், தற்போது அவரது ஆட்சி வீடான மீனத்திற்கு மாறுகிறார்; மீனத்திலிருக்கும்போது, கடக ராசியையும், கன்னி ராசியையும், விருச்சிக ராசியையும் தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துகிறார்.வீரியம் நிறைந்த ராகு, மீனத்திற்கு அடுத்த மேஷத்திலும், கேது அஷ்டம ஸ்தானமாகிய துலாத்திலும் நிலைகொண்டுள்ள தருணத்தில், குரு பகவானின் மீன ராசி மாறுதல், நிகழ்கிறது.கீழ்க்கண்ட பலன்கள் அனைத்தும், மிகப் புராதனமான ஜோதிட கிரந்தங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கணித முறைகளின் மூலம் மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டு,  எமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய தினகரன் வாசக அன்பர் களின் அடுத்துவரும் 1 வருட கால நன்மைக்காக அளிப்பதில் மன நிறைவை அடைகிறோம்.அந்தந்த ராசிகளுக்குக் கூறியுள்ள பரிகாரங்களனைத்தும், கடைப்பிடிப்பதற்கு மிகவும் எளிதானவை; சக்தியோ அளவிடற்கரியது. வேத கால மகரிஷிகள் நமது நன்மைக்காக அருளியவை! இவற்றைக் கடைப்பிடித்து வரும் சுபக்ருது தமிழ்ப்புத்தாண்டில் அனைத்து நலன்களையும் அடைந்து, இன்புறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.முற்பிறவிச் செயல்களும், குருவும்!இப்பிறவியில், நம் ஒவ்வொருவரின் அந்தரங்க (சொந்த) வாழ்க்கையும், நல்லவிதமாக அமைவது, முற்பிறவிகளில் நாம் செய்துள்ள நற்செயல்களின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகின்றது என வேதகால மகரிஷிகள் அருளியுள்ள நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றை மிகப் பண்டைய ஜோதிட நூல்களும் விளக்கியுள்ளன.நமது ஜனனகால ராசியின் லக்கினம், மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் இடத்தை (ராசியை) ஆராய்ந்து பார்த்தால், முற்பிறவியில் நாம் எவ்விதம் வாழ்ந்திருக்கக்கூடும்? என்னென்ன தவறுகளை (பாபங்கள்) செய்திருக்கக்கூடும் என்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவற்றை அறிந்துகொண்டால்தான், அத்தகைய தவறுகளினால் ஏற்படும் கிரக தோஷங்களிலிருந்து நம்மை தக்க பரிகாரங்களினால் விடுவித்துக்கொள்ள முடியும். இதற்காக ஏற்பட்டவையே “பிருஹத் சம்ஹிதை”, “பூர்வபாராசர்யம்”, “பூர்வ ஜென்ம நிர்ணய சாரம்”,  “பிருஹத் ஜாதகம்”, “காலப்ரகாசிகா”, “ஜோதிட ரத்னாகரம்”, “பாஸ்கர சம்ஹிதை” போன்ற விலைமதிப்பிடமுடியாத ஜோதிட ரத்தினங்கள். இவற்றின் அரிய பிரதிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் கோரக்பூர் கீதாபவன் நூலகம், காசி ஹிந்து சர்வகலாசாலை நூலகத்திலும் இன்றும் உள்ளன.பகவத் கைங்கர்ய,ஜோதிட ஸாகர சக்கரவர்த்திA.M.ராஜகோபாலன்…

You may also like

Leave a Comment

12 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi