குருவடியே சிவனடி

அழகான கிராமத்தில் போதிய நிலபுலன்களுடன் கூடிய விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது மகனாக பிறந்தான் விஸ்வநாதன். மூத்தது ஒரு அக்காவும், அண்ணனுமாக, தனக்கு இளையது தங்கை. தன்னைத்தவிர மற்ற மூவரும் பெற்றோருக்கும், உற்றாருக்கும் பிடித்தவர்களாக இருக்க, கூடாத சகவாசத்தால் தவறான பழக்கங்களுக்கு ஆளாகி, பெற்றவர்களும், உறவினர்களும் தரக்குறைவாக பேச, ஒரு நாள் வீட்டைவிட்டு கால் போனபோக்கில் பயணித்தான் விஸ்வநாதன். கானகத்தின் நடுவே ஒரு சிறிய ஆஸ்ரமம். பசியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உள்ளே சென்றான். ‘‘குடிக்க கஞ்சி கிடைக்குமா சாமி’’ என்றான். உள்ளே இருந்தவர் ‘‘சாப்பாடே தருகிறேன். வா, சம்மணம் இட்டு சாப்பிடு’’ என்றபடி தனது சீடனை வைத்து உணவு பரிமாறுகிறார். உணவு உண்ட பின், விஸ்வநாதனைப்பார்த்து நீ யாரப்பா? எங்கிருந்து வருகிறாய் என்று வினா தொடுத்தார். அவரிடம், தன்னைப்பற்றி விபரங்களை விளக்கமாக கூறினான் விஸ்வநாதன்.எங்கு செல்கிறாய் என்ன வேண்டும் என்று கேட்க, ‘‘சிவனைத்தேடி, சிவலோகம் போக வேண்டும். சிவனை நான் நினைத்திருக்கும் போது என் ஜீவன் போக வேண்டும். விறகுக்கு இறையான பின்னாவது, உறவுகளுக்கு நான் புனிதனாக வேண்டும்.’’ என்றான். அதற்கு நான் வழி செய்கிறேன் என்று அவர் கூறியதும், ‘‘சுவாமி நீரே எமது குரு’’ என்று பணிந்தான். அப்போது நான் உனக்கு கலைகளை, வேதங்களை சொல்லித்தரும் குருவாக இருக்கலாம். ஆனால் மோட்சம் பெறவும், நீ புனிதனாகவும் வேண்டுமானால் ஒரு ஞானியை குருவாக நீ கருத வேண்டும். என்றார். ஆண்டுகள் சில கடந்த நிலையில் தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான். ‘‘குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுக்கொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும், உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன்? வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”.. அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கிய குரு, அவனை தீர்க்கமாகப் பார்த்தார். ‘‘விஸ்வநாதா..!  ஞானக் குருமார்கள், தான் வழிபடும் தெய்வத்தை சதா எண்ணிக்கொண்டு, தன் மனதையும், உடலையும் வருத்தி பக்தி செலுத்தி வாழ்பவர்கள். அவர்களிடத்தில் ஆண்டவன் உரையாடுவான். அத்தகைய குருமார்கள் வல்லமை கொண்ட அவர்களின் திருவடி. இந்த அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் ஈசனின் திருவடிக்கு ஒப்பாகும். குருவடிதான் சிவனடி.  சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிறார். காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக..சென்று வா”…என்றார் குரு. தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாதன்.காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு, நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான். வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்கு தட்டுப்படவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான். அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோயில் கோபுரம் நிழலாக தெரிந்தது. நடுக்காட்டில் கோயில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்.. கோயில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது….. ‘‘வா விஸ்வநாதா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்.” தனது ஞான குருவை காணும் ஆவலில் கோயிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன். அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது…பரதேசி பண்டாரமாக இருந்த முதியவர் கோயிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்துக் கொண்டு படுத்திருந்தார்.விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. “எனது குரு உங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்கக் கூடாதா?” என்றான். அந்த முதியவர், விஸ்வநாதனை பார்த்து கூறினார். ‘‘ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்கு வேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது.” என்றார். கோபத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன், அவரின் கால்களை பிடித்து சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்தான். கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது. பல இடங்களில் மாறி மாறி வைத்தான். அனைத்து இடத்திலும் சிவலிங்கம் தோன்றின. கடைசியில் தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான். தானே சிவமானான்.திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.- திருமந்திரம் – 1598ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டு செல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின் கருணை எளிதில் எட்டிவிடும்.தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related posts

காக்கும் கல்

கனவு இல்லத்துக்கு கைகொடுக்கும் இறைவன்

பூவும் பூசையும்…