குருமாம்பேட்டில் பரபரப்பு வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் சாராயக்கடையை அகற்றக்கோரி கோஷம்

புதுச்சேரி, ஜூன் 29: குடியிருப்பு மத்தியில் இருக்கும் சாராயக்கடையை அகற்றக்கோரி குருமாம்பேட்டில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி குருமாம்பேட் சிவசக்தி நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு குடியிருப்புக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான சாராயக்கடை உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சாராயக்கடைக்கு குடிக்க வரும் நபர்கள் குடித்துவிட்டு இங்கு இருக்கும் வீதிகளில் துணிகள் இன்றி படுத்து தூங்குவதாகவும், இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகளை கதவுகளை தட்டி எழுப்பி தங்களுக்கு உணவு, தண்ணீர் வேண்டுமென தொந்தரவு செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் 3 வருடங்களாக முதல்வர், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுக்களை கொடுத்து வந்துள்ளனர். ஆனால் இதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நாளை சாராயக்கடை ஏலம் விடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு குடியிருப்பு வாசிகள் முதல்வர், அமைச்சர், தலைமை செயலகத்தில் மீண்டும் மனுக்கள் கொடுத்துள்ளனர். இதனிடையே சாராயக் கடையை அப்புறப்படுத்த வேண்டும், நாளை நடைபெறும் ஏலத்தில் இப்பகுதியில் இருக்கும் சாராயக்கடையை ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது, இங்குள்ள சாராயக் கடையை அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்புக் கொடிகளை கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இனியும் தங்கள் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்