கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி கோலாகலம்: திரளான பக்தர்கள் புனித நீராடி தரிசனம்

கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா நடைபெறும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரன்று மாசி மக திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான கும்பகோணம் மகா மகத்திருவிழா தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விசுவநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 11ம் தேதி அறுபத்து மூவர் வீதி உலாவும், 12ம் தேதி ஓலைச்சப்பரமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. இந்நிலையில் இன்று மாசிமகத்தையொட்டி மகாமக குளத்தில் காலை 12 மணிக்கு மேல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதி கும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.  அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனர்.இதேபோல் வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி கோயில், ராஜகோபால சுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில்களில் 10 நாள் மாசிமக விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இன்று காலை 7 மணிக்கு சக்கரபாணி கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து 12 மணியளவில் காவிரி ஆற்றங்கரை சக்கர படித்துறையில் வைணவ கோயில்கள் சார்பில் தீர்த்தவாரி நடந்தது. மாசிமகத்தையொட்டி சாரங்கபாணி கோயிலில் இன்று தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று காலை மாசி மக தீர்த்தவாரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு மகா மகக்குளக்கரையில் தர்ப்பணம் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர்….

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி