கும்பகோணம் பகுதியில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெற வேண்டும்

கும்பகோணம், ஆக. 17: கும்பகோணம் பகுதியில் செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் பொதுமக்கள் மாநகராட்சியில் உரிய பணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டுமென மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிமம் பெற்று செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அர்பன் லோக்கல் பாடி ரூல்ஸ் 2023ன் படி செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 வீதம் பணம் செலுத்தி உரிய உரிமம் பெற்று அதில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும், அவைகள் சாலையில் திரிவதும் கண்டறியப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வளர்ப்பு பிராணிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டவிதிகளின்படி வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையர் லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது