குமரி மீனவர் பலியான விவகாரம் இந்தோனேஷிய அரசிடம் இருந்து விபரங்கள் பெற நடவடிக்கை

 

நாகர்கோவில், செப்.2: இந்தோனேஷியாவில் குமரி மாவட்ட மீனவர் பலியான விவகாரத்தில் ஆவணங்களை கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரிய ஜெசின்தாஸ். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி அந்தமான் தீவில் இருந்து 8 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றார். அப்போது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேஷியா கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அதில் 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மரிய ஜெசின்தாஸ் உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மரிய ஜெசின்தாஸ் சிறையில் வைத்து உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு அடையாளம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக குமரி மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: நித்திரவிளை போலீசாரின் விசாரணையில் இறந்துபோன மரிய ஜெசின்தாஸ் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி அவரையும், அவருடன் படகில் இருந்த 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இறந்துபோன மரிய ஜெசின்தாஸ் உடன் இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கைது செய்யப்பட்ட அவர்கள் யாவரையும் இந்தோனேஷிய போலீசார் அடிக்கவோ, துன்புறுத்தவோ இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் சம்பவ இடம் அனைத்தும் இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்றுள்ளது.

இறந்து போன மரிய ஜெசின்தாஸ் உடலில் காணப்பட்ட காயங்களை வைத்து சிபிஐ விசாரணை கோரி வருகின்றனர். இந்த சம்பவமானது இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்றதால் மரிய ஜெசின்தாஸ் சிறைச்சாலையில் இருந்த விபரங்கள் மற்றும் அது தொடர்பான அந்நாட்டு அரசு அல்லது நீதிமன்ற ஆணைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அது தொடர்பான விபரங்கள் என பல ஆவணங்கள் வழக்கின் தன்மையை உறுதி செய்ய தேவைப்படுவதால் அவற்றை அரசு மூலம் பெறுவதற்காக ‘டைரக்டர் ஆப் பிராசிகியூசன்’ மூலம் சட்ட கருத்துரை பெற்று மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆவணங்கள் பெற்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்