குமரியில் டெங்கு காய்ச்சல் பரவல் தொடக்கம்: வீடுகள், தனியார் நிறுவனங்களில் கொசு உற்பத்தியை தடுக்க சோதனை..! காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிகரிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கொரோனாவின் 2 வது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 666 நபர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள் தோறும் சராசரியாக 3500 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று புதிதாக 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஆண்கள் 15 பேர். பெண்கள் 17 பேர் ஆவர். நாகர்கோவில் மாநகராட்சியில் 7 பேர், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் ஒருவர், கிள்ளியூரில் 2 பேர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 8 பேர், மேல்புறம் ஒன்றியத்தில் 3 பேர், முஞ்சிறையில் 3 பேர், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 2 பேர், திருவட்டார் ஒன்றியத்தில் 2 பேர், தோவாளையில் ஒருவர், தக்கலை ஒன்றியத்தில் 3 பேர் என மொத்தம் 32 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய மொத்த பாதிப்பு 57 ஆயிரத்து 291 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 278 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 51 பேரும், கோவிட் கவனிப்பு மையங்களில், தனியார் மருத்துவமனைகளில் 227 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 54,954 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மாவட்டத்தில் முககவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக நேற்று மட்டும் 123  நபர்களுக்கு அபராதமாக  ரூ. 25,800 வசூலிக்கப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 97,178 நபர்களுக்கு  அபராதமாக 2 கோடியே 16 லட்சத்து 32 ஆயிரத்து 370 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்ட எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்பை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதுவரை ஜிகா வைரஸ், குமரி மாவட்டத்தில் கண்டறியப்பட வில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்கிடையே பருவமழை காலம் என்பதால், தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. சமீப காலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் வேகமாக நடக்கின்றன. மாநகர பகுதியில் கொசு ஒழிப்பு  பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள், வீடுகளில் ஆய்வு செய்து வருகிறார்கள்.  சுற்றுப்புறங்களில் சிரட்டை, டயர்கள், பூந்தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். மேலும் பிரிட்ஜ், ஏ.சி.களில் தேங்கும் தண்ணீரிலும் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் என்பதால் இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என கூறி உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இன்று கிருஷ்ணன்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட எம்.எஸ். ரோடு பகுதியில் பகுதியில் முகாம் நடக்கிறது. வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கோர்ட் ரோடு, வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட புலவர்விளை, வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட இருளப்பபுரம், தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட பூங்கா அவென்யூ  பகுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது. இதே போல் சுகாதாரத்துறை சார்பில் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா இல்லாமல் காய்ச்சல் இருப்பவர்களுக்கு டெங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை