குமரியில் கனமழை நீடிப்பு பேச்சிப்பாறையில் வெள்ளம்; 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்: சிற்றாறு அணைகளிலும் உபரிநீர் திறப்பு

குலசேகரம்: குமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நேற்றுமுன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. மலைக்கிராமங்களுக்கு செல்லும் பாதைகள், சிறுசிறு பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து  துண்டிக்கப்பட்டது. கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பேச்சிப்பாறையை அடுத்த மோதிரமலையில் இருந்து குற்றியாறு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாலையில் அவ்வழியே சென்ற 2 அரசு பஸ்கள் பயணிகளுடன் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என்று பலரும் இரவு சுமார் 8.30 மணி வரை அங்கேயே  தத்தளித்தனர்.  இந்த தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்தனர். தொடர்ந்து கோதையாறு அணை மறுகால் தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தினர். இதனால் தண்ணீர் வரத்து ஓரளவு குறைந்தது. இதையடுத்து 2 அரசு பஸ்களும்  குற்றியாறு புறப்பட்டு சென்றன. நேற்று காலை கோதையாறு மற்றும் மலையோர பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.  நேற்று காலை 11 மணியளவில் சுமார் 4 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 288 கன  அடி நீர் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்டம் 44.54 அடியாக இருந்தது. அணைக்கு 2,600 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது.  சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் பாய்ந்து  வருவதால் கோதையாறு கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் கலங்கிய நிலையில், பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோதையாறு மூவாற்றுமுகம் பகுதியில் இணைந்து உருவெடுக்கும் தாமிரபரணி ஆறும் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு