Sunday, June 30, 2024
Home » குபேர வாழ்வு தரும் கும்பேஸ்வரர்

குபேர வாழ்வு தரும் கும்பேஸ்வரர்

by kannappan
Published: Last Updated on

ஈசனிடத்தில் பிரளய விளைவுகள் பற்றிய தன் அச்சத்தை உரைத்தார் பிரம்மா: ‘‘பிரளயப் பேரழவில் சிருஷ்டியின் ஆதாரங்களே அழியுமோ எனும் கவலை என் நெஞ்சத்தை தணலாக எரிக்கிறது. மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி தொடர காத்தருள வேண்டும்.’’ பிரம்மா கலங்கிய கண்களினூடே மகா தேவனை பார்த்தார். ஈசன் பிரம்மனைப் பார்த்து ‘‘கவலை கொள்ளாதே நான்முகா. யாம் உறையும் புண்ணிய தலங்களிலிருந்து திருமண் கொணர்ந்து, அமுதத்தையும், புனித தீர்த்தமும் கலந்து அழியாத கும்பம் எனும் குடத்தை செய். அதன் மையத்தின் சிருஷ்டியின் ஆதாரங்களை வைத்து மூடு. உன்னுடைய நான்முகத்தினின்றும் எதிரொலித்துத் தெறிக்கும் வேத வரிகளை அதில் அலை அலையாக நிரப்பு. ஆகமங்களை ஆனந்தமாக கலந்து, புராண இதிகாசங்களை நாற்புறமும் வைத்து, இன்னும் நிறைய அமுதம் பெய்து மாவிலை சொருகி, தேங்காய் வைத்து தர்ப்பையை படரவிட்டு, பூணூலைச் சார்த்தி, வில்வ தளங்களால் அர்ச்சித்து உறியிலேற்று. மேருவின் மேல் பகுதியில் சரிந்திடாமல் நிறுத்திடு. ஆழி ஊழிக்காலம் அசைந்து வரும்போது மேருவின் மேலிருக்கும் கும்பமும் அசையும். மெல்ல நகர்ந்து பாரத தேசத்தின் தென் திசையில் சென்று தங்கும். அங்கு சென்று கும்பத்தினின்று பெருகும் அமுத கலையான ஆதாரங்களை உமக்குள் ஏந்தி சிருஷ்டியை தொடரலாம்’’ என்றார், சிவன். அதனைக் கேட்ட பிரம்மனின் திருமுகம் சிவப்பிரகாசமாக ஜொலித்தது. பிரம்மா கும்பத்தை செய்து முடித்தார். பிரளயப் பேரலை விண்ணுற நிமிர்ந்து வந்தது. மேரு மெல்ல அதிர்ந்தது. அதன்மேல் அமர்ந்திருந்த அமுதக் கும்பம் இடதும் வலதும் அசைந்தது. படகுபோன்று கும்பம் மிதந்து ஈசன் திருப்பார்வை பதிந்த அவ்விடத்தில் நின்றது. உடனே ஊழியும் அடங்கியது. அமுதமும், சிருஷ்டி ஆதாரமும் கலந்திருந்த கும்பத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டார் பிரம்மா. சிவன் அத்தலத்தை அடையும் பொருட்டு வேடரூபம் தாங்கிவர, கணநாதரும் பிறரும் அவரைப் பரிவாரமாகத் தொடர்ந்தனர். உமாதேவியோடு தென் திசை நோக்கிச் செல்லுகையில் இடைமருதூர் எனும் திருவிடைமருதூருக்கு அருகில் நகர்ந்தனர். அமுதக் குடத்தை கண்ணுற்றனர். சாஸ்தா இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் பொருட்டு அழியாத அந்த மாய குடத்தை குறிவைத்து பாணம் தொடுத்தார். ஆனாலும், கும்பத்தை பிளக்க முடியவில்லை. ஈசன் இப்போது முன் வந்தார். (பாணாதுறை எனும் இடத்தில் இன்றும் பாணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது) சிவபெருமான் வேறொரு திக்கிலிருந்து பாணம் தொடுத்தார். அந்த பாணம் கும்பத்தின் மூக்கை துளைத்தது. அது வழியாக அமுதம் வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று. தேவாரத்தில் இத்தலத்தை குடமூக்கு என்றே அழைத்தனர். அமுதப் பெருவூற்று புகுபுகுவென பொங்கியது. அமுதத் துளிகள் தனித் தனி குளமாக திரண்டன. ஒன்று மகாமக குளம் என்றும், மற்றொன்று பொற்றாமரை குளம் என்றும் அழைக்கப்பட்டன. அந்த கும்பகோணத்தில் கும்பேஸ்வரரான பரமேஸ்வரன் கோயில் கொண்டார். வேடரூபம் கொண்ட மகாதேவன் இத்தலத்திலேயே தன்னொளி வீசி கருணை மயமாக அமர ஆவலுற்றார். கும்பத்து அமுதத்தோடு அத்தல திருமண்ணும் சேர்ந்து லிங்க உருவாயிற்று. ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரரானது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், அமுத கும்பேஸ்வரர் எனும் பல்வேறு திருநாமங்களோடு அருளாட்சி செய்தார் ஐயன். வானவரும், தேவர்களும் கும்பேஸ்வரத்தை அடைந்தனர். கும்பேசருக்கு பிரம்மோற்சவம் நடத்தினர். சோழ தேசத்தின் ரத்னப் பதாகைபோல விளங்குவது குடந்தை. அமுதமும், ஈசனும், வேதமும், நான்முகனான பிரம்மனும் இத்தலத்தை உருவாக்கியதால் தனிப்பெரும் வசீகரத்தை இன்றளவும் பெற்றிருக்கிறது. இத்தலத்தில் உட்பிராகாரத்தின் நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். இந்த லிங்க உருவே குடம் போன்று சாயலை கொண்டிருக்கிறது. அருளமுதம் எனும் சொல்லே இத்தலத்திற்குரியதுதான். ஏனெனில் கும்பேஸ்வரரே அமுதக் குடத்தினுள் பேரருள் பெருகி பரவியிருக்கிறார். அமுதம் இருப்பதனால் மரணமிலாப் பெருவாழ்வு அளித்து தன் அருட்குடத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார். எங்கெல்லாம் கும்பம் வைக்கப்படுகிறதோ அங்கு இந்த கும்பேஸ்வரர்தான் விரைந்தோடி வருகிறார். இத்தல நாயகி மங்களாம்பிகை. மங்களத்தை விருட்சம் போன்று வளர்ப்பதால் ஞானசம்பந்தப் பெருமான் அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப் பதிகத்தில் குறிக்கிறார். திருச்செங்கோட்டுத் தலத்தில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தாள் எனவும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் உடற்பாகம் திருமுடி முதல் திருப்பாத நகக்கணுவரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன. ஆகவே மற்ற தலங்கள் ஒரு சக்தி வடிவத்தை பெற்றிருந்தால், இங்கு சகல சக்திகளையும் தன் திருவுருவத்தில் அமைந்த தலையாய சக்தி பீடமாக அம்பாளின் சந்நதி விளங்குகிறது. சித்தர்களில் முதன்மையானவரான கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இத்தலத்தில்தான். தரிசிப்போர் பெரும்பாக்கியமுறுவர் என்பது உறுதி. அது மட்டுமல்லாது ‘‘கும்பகோணமாம் குபேரப் பட்டணமாம்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. இத்தல நாதரை தரிசிக்க குபேர வாழ்வு கிட்டும் என்பதும் திண்ணம். கும்பகோணத்தில் ஊரின் மையப்பகுதியில் ஆலயம் அமைந்துள்ளன.படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்தொகுப்பு: கிருஷ்ணா

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi