குன்றத்தூர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

குன்றத்தூர், ஆக.29: சென்னை புறநகர் பகுதிகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக குன்றத்தூர் உள்ளது. இதனை சுற்றிலும் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல் பெற்ற தலமான குன்றத்தூர் முருகன் கோயிலும் இங்கு அமைந்துள்ளது இதனால், நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக குன்றத்தூர் வந்து செல்கின்றனர். குன்றத்தூர் பிரதான சாலைகளில் எப்போதுமே வாகன போக்குவரத்து மிகுந்து, மக்கள் அதிக நெருக்கத்துடன் செல்வதை காண முடியும். ஏற்கனவே குன்றத்தூரில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் குறுகிய சாலையாக உள்ளதுடன், அவையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பகல், இரவு என எந்நேரமும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது.

இதனால், சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கடைகள், விளம்பர பதாகைகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றை அகற்றி பொதுமக்கள் தங்கு தடையின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், நேற்று குன்றத்தூர் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் கூட்டாக இணைந்து, குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முருகன் கோயில் செல்லும் பிரதான சாலையில் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதனால், காலை முதலே அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஒருசிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி