குத்தகை விவசாயிகளுக்கு மீண்டும் நிலம் வழங்க உறுதி அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குத்தகை விவசாயிகளுக்கு மீண்டும் நிலம் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதற்காக அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான அரண்மனை தேவஸ்தான நிலம், சுமார் 250 ஏக்கரில், அருகில் உள்ள இனாம் அருள்மொழிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் பல தலைமுறைகளாக குத்தகை விவசாயம் செய்து வந்தனர். இப்போது அந்நிலத்தை ஏலமுறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் விட அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழ்நாடு அடிமனை பயன்படுத்துவோர் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக, தஞ்சை மேல வீதியில் செயல்படும் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன்பு, கடந்த 21ம் தேதி பாதிக்கப்பட்ட 200 விவசாயிகள் பங்கேற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து ஏலம் விடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அடிமனை பயன்படுத்துவோர் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், அரண்மனை தேவஸ்தான அதிகாரிகளுடன் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில், ”சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் அவர் பயிரிட்ட நிலத்தை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்வது” என அப்போது முடிவெடுக்கப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜீவபாரதி, மாவட்ட செயலாளர் ராம், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், கிராம விவசாயிகள் ராமதாஸ், சேதுராமன் உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கத்தில் போராட்டம் மற்றும் தலையீடு காரணமாக, தேவஸ்தான அதிகாரிகள், மீண்டும் ஏற்கனவே குத்தகை விவசாயம் செய்த விவசாயிகளுக்கே நிலத்தை வழங்கி உள்ளனர். இதற்காக குத்தகை விவசாயிகள், சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related posts

பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை