குண்டும் குழியுமாக மாறிய சாலை; வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே கடப்பாக்கம் தரைப்பால சாலை சீரமைக்கப்படாததால், தற்போது மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் சென்று வருவதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் ஆரணியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள பழவேற்காடு-காட்டூர் செல்லும் இணைப்பு தரைப்பால சாலை சேதமடைந்து துண்டிக்கப்பட்டது. இதனால் கடப்பாக்கம், ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு, காட்டூர் வழியாக வாகன ஓட்டிகள் சென்று வருவதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த தரைப்பால பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைத்துள்ளனர். தற்போதைய மழையில் அந்த மணல் மூட்டைகளும் அடித்து செல்லப்பட்டு, தரைப்பால சாலை குண்டும் குழியுமாக மாறி, மீண்டும் கடுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், மீஞ்சூர் ஒன்றியத்தின் வழியே செல்லும் ஆரணி ஆற்றின் குறுக்கே மழைநீர் கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆண்டார்மடம் கிராமத்தில் உள்ள தரைப்பால சாலை கடந்த 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பரிதாப நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் மழைக் காலத்தின்போது ஒரு மாதத்துக்குமேல் படகு சவாரி செய்ய வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, ஆண்டார்மடம் கிராமத்தில் உள்ள காட்டூர்-பழவேற்காடு இணைப்பு சாலையில் தரைப்பால சாலையை அகற்றிவிட்டு, அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைத்து நெடுஞ்சாலையாக மாற்ற தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்