குண்டர்களை வைத்து மிரட்டல்… வீடுபுகுந்து அத்துமீறல்; கடன் தொகையை வசூலிப்பதில் எல்லை மீறும் நிதி நிறுவனங்கள்: மீண்டும் பறிபோனது ஒரு உயிர்

பெரம்பூர்: இன்றைய சூழலில் நடுத்தர மக்கள் மட்டுமின்றி வசதிபடைத்தவர்களும் வீடுகட்டுவதற்கு, தொழில் தொடங்குவதற்கு, உயர் கல்விக்கு என பல்வேறு தேவைகளுக்கு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் கடனை எவ்வாறு வசூல் செய்ய வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவான வரைமுறைகள் கொடுத்திருந்தாலும், அதனை பெரும்பாலான தனியார் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவது கிடையாது. வங்கி நிர்வாகம் அடியாட்களை வைத்து, கடன் வாங்கியவர்களை மிரட்டுவதும், பொது வெளியில் அவமானப்படுத்துவதும் நடந்து வருகிறது. இதனால், கடன் வாங்கிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவ்வாறு நிகழ்வுகள்  நடக்கும்போது, இதுகுறித்து அனைவரும் பேசுவார்கள் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும். ஆனால் சிறிது காலம் கழித்து மீண்டும் நிதி நிறுவனங்கள் தங்களது அடாவடி நடவடிக்கையை கட்டவிழ்த்து விடுவார்கள். இதேபோன்று நிதி நிறுவன நெருக்கடியால் 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் தாதாங்குப்பம் துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் அமிர்தராஜ் (47). இவர் பழைய இரும்பு பொருட்கள் விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரதிதேவி (40). இவர்களுக்கு 18 மற்றும் 15 வயதில் 2 பெண் மகள்கள் உள்ளனர். விஜய் அமிர்தராஜ் கடந்த 2013ம் ஆண்டு வில்லிவாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.18 லட்சம்  கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை அடுத்த 10 வருடங்களில் ரூ.40 லட்சமாக செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அந்த நிதி நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரை அவர் ரூ.29 லட்சத்தை செலுத்தி விட்டார். இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட தொழில் மந்த நிலையால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீதி பணத்தை கட்ட முடியவில்லை. இதனால் அடிக்கடி தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஆட்கள் வந்து பணத்தை எப்போது கட்டுவீர்கள் என கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தொடர்ந்து செல்போன் மூலம் அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை வீட்டில் 2 பெண் மகள்கள் மட்டும் இருக்கும்போது வீட்டிற்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்யப் போகிறோம், நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பயந்து போன விஜய் அமிர்தராஜின் மகள்கள், தந்தைக்கு போன் செய்து அழுதுள்ளனர். அதன் பிறகு விஜய் அமிர்தராஜ், விரைவில் பணம் கட்டி விடுவதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் திரும்பி சென்றனர். இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 தினங்களாக மன உளைச்சலில் இருந்த விஜய் அமிர்தராஜ், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கினார்.  உறவினர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜய் அமிர்தராஜ் நேற்று காலை 6 மணிக்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். அதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ரதிதேவி இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனது கணவர் வாங்கிய பணத்தில் ரூ.29 லட்சம்  செலுத்தி விட்டதாகவும், மீதி பணத்தை சரிவர கட்ட முடியாததால் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனம் மூலமாக நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனது கணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.*ஏஜென்சி முறைஒவ்வொரு நிதி நிறுவனங்களும் கலெக்ஷன் ஏஜெண்ட்களை வைத்து கடனை வசூல் செய்கின்றனர். வாடிக்கையாளர் தொடர்ந்து பணம் கட்டாமல் இருந்து வந்தால் அவர்களை ஏஜென்சியிடம் ஒப்படைத்து விடுகின்றனர். அந்த பணத்தை எப்படியாவது அவர்கள் வசூல் செய்து தர வேண்டும். அதுதான் அவர்களுக்கு நிதி நிறுவனங்கள் தரும் அசைன்மென்ட். இதற்கான அவர்களுக்கு கமிஷன் தரப்படுகிறது. இதனால் தனியார் நிதி நிறுவனங்களுக்கு வேலை செய்யும் ஏஜென்சிகள் குண்டர்கள் மற்றும் ரவுடிகளை வைத்து பணம் வசூல் செய்யும் வேலையை  செய்து வருகின்றனர்.*பெண்கள், குழந்தைகளிடம் அத்துமீறல்ஏஜென்சி முறையில் உள்ள கலெக்ஷன் ஏஜென்ட்கள் வீடுகளுக்கு வரும்போது பெரும்பாலும் ஆண்கள் வேலைக்கு சென்று இருப்பார்கள். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள். அவர்களை மிரட்டும் தொணியில் கலெக்ஷன் ஏஜெண்ட்கள் நடந்து கொள்வதாகவும், சிலர் எல்லை மீறி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆண்களின் வீக்னெஸ் குடும்பம் என்பதை அறிந்த கலெக்சன் செய்ய வரும் நபர்கள், கடன் வாங்கிய நபர் போன் எடுக்கவில்லை என்றால்  குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள பெண்களுக்கு தொல்லை கொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக போனில் வந்து விடுகின்றனர் அல்லது நேரில் வந்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெண்களை ஒரு கருவியாக கலெக்ஷன் ஏஜெண்ட்கள் பயன்படுத்துகின்றனர்.போலி வக்கீல்களை வைத்து மிரட்டல்பெரும்பாலான நிதி நிறுவனங்கள் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த நபர்களை வைத்துக்கொண்டு எங்கள் ஏஜென்சியின் வழக்கறிஞர்கள் என்று கூறி பணத்தை வசூல் செய்வதற்கு அனுப்புகின்றனர். பணத்தை வாங்கியவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் வந்துள்ளார்கள் என்று நினைத்து வீடு அல்லது சொத்து ஏலத்துக்கு வந்து விடுமோ என அஞ்சி பணத்தை எப்படியாவது கட்டுகின்ற நிலைக்கு வந்து விடுகின்றனர். அல்லது அவர்களுடன் மல்லுக்கட்டி கடைசியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைகளும் ஏற்படுகிறது.*பக்கெட் 1.2.3தனியார் நிதி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை 3 வகையாக பிரித்து வைத்துள்ளனர். ஒரு மாதம் பணம் கட்டவில்லை என்றால் அவர்களை தொல்லை தராமல் பொறுமையாக கையாள வேண்டும் என்றும் இதற்கு பக்கெட் ஒன் என பெயர் வைத்துள்ளனர். 2 மாதம் பணம் கட்டாதவர்களை பக்கெட் 2 வில் வைத்துள்ளனர் இவர்களிடம் சற்று கரராக பேசி பணத்தை வாங்குகின்றனர். 3 மாதம் வரை படம் கட்டாதவர்களை பக்கெட் 3ல் வைத்துள்ளனர். இவர்களிடம் எப்படியாவது பேசி பணத்தை வாங்கி விட வேண்டும் என்பது வசூல் செய்பவர்களின் நிலை இந்த 3ம் முடிந்தவுடன் அடுத்த சட்டபூர்வமான நடவடிக்கைக்கு நிதி நிறுவனங்கள் செல்கின்றனர்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு