குடும்ப செலவுக்கு பணம் தராத தகராறு மனைவியை கொலை செய்து விட்டு வலிப்பு நோயில் இறந்ததாக நாடகம்: கணவன் கைது

சென்னை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (30). தி.நகரில் நடைபாதை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த அப்ரின் ரோஸ் (20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி இவர்களது வீட்டில் நீண்ட நேரம் குழந்தை அழும் சத்தம் கேட்டது.  இதைப்பார்த்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ரேஷ்மா என்பவர், ‘‘ஏன் குழந்தை அழுகிறது,’’ என்று சாகுல் ஹமீதிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘‘மனைவிக்கு வலிப்பு நோய் வந்து மயங்கி கிடக்கிறாள். அவளை மருத்துவமனையில் சேர்க்க கிளம்பிக் கொண்டு இருக்கிறேன். குழந்தை பசிக்கு அழுகிறது,’’ என்று கூறியுள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவி அப்ரின் ரோஸை மீட்டு தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகும்படி கூறியுள்ளனர்.அதன்படி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில் அப்ரின் ரோஸ் இறந்தது தெரிந்தது. தகவலறிந்த அப்ரின் ரோஸின் தாய் நிஷா, தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், சாகுல் ஹமீதை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளியில் வரும், என போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், ஆர்.கே.நகர் போலீசார், அப்ரின் ரோஸ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்ரின் ரோஸ் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து, சாகுல் ஹமீதை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், சாகுல் அமீது குடும்ப செலவுக்கு சரிவர பணம் தராததால் தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சாகுல் ஹமீது, மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதை மறைக்க வலிப்பு நோயால் மனைவி இறந்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.  இதையடுத்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு