குடியாத்தம் சார் பதிவாளர் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு விஜிலென்ஸ் ரெய்டில் ₹77 ஆயிரம் சிக்கிய விவகாரம்

குடியாத்தம், செப்.18: குடியாத்தம் சார் பதிவாளரிடம் கணக்கில் வராத ₹77 ஆயிரம் சிக்கிய நிலையில், அவரை இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்கம் நகரில் சார்- பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளராக முத்து அழகேசன் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் அங்கு நடைபெறும் பதிவுகளுக்கு ஏற்றவாறு லஞ்சம் பெற்று வருவதாகவும், பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகவும், பினாமி பெயரில் பல கோடி ரூபாய் வங்கிக்கணக்கில் வைத்திருப்பதாகவும், பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் திருத்தங்கள் செய்து பதிவு செய்வதற்காக, பத்திர எழுத்தர் மூலம் லஞ்சம் பெறுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர் தலைமையில் நேற்று முன்தினம் சார்- பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் சார் பதிவாளரிடம் இருந்து கணக்கில் வராத ₹77 ஆயிரத்து 120ஐ பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சார்- பதிவாளரை வேலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி விட்டு சென்றனர். இதுகுறித்து லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கூறுகையில், ‘சோதனையில் கணக்கில் வராத ₹77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்காக சார்- பதிவாளரை 18ம் தேதி(இன்று) லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் அங்குள்ள பத்திர எழுத்தர் மூலம் லஞ்சம் பெறுவதாக தெரிகிறது. இதில் தொடர்புடையவர்கள் யார்? என உறுதி செய்யப்பட்டு விரைவில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்’ என்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி