குடியாத்தம் அருகே மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்-தர்ணா போராட்டத்தால் நடவடிக்கை

குடியாத்தம் : குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை டார்ச்சர் செய்வதாக கூறி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து வேலூர் சிஇஓ முனுசாமி உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு குடியாத்தம் நகரம் மற்றும் பெரும்பாடி, அக்ராகரம், ஏரிப்பட்டறை, ஜிட்டப்பல்லி, சேம்பல்லி, கன்னிகாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக பிரமிளா இவாஞ்சலின் என்பவர் உள்ளார்.இந்நிலையில் தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின், தங்களை ஒருமையில் பேசியும், அவதூறாக பேசி டார்ச்சர் செய்வதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேட்க பள்ளிக்கு வந்த மாணவிகளின் ெபற்றோரையும் தலைமை ஆசிரியை அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர், குடியாத்தம் டவுன் போலீசில் சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்தனர்.இதே பள்ளியில் பணியாற்றும் குடியாத்தம் அடுத்த காமாட்சியம்மன் கார்டனை சேர்ந்த தையல் பயிற்சி ஆசிரியை ஜோதியையும் தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் கடந்த சில நாட்களுக்கு முன் ஒருமையில் பேசி மிரட்டினாராம். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆசிரியை 2 நாட்களுக்கு முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இதுதொடர்பாக தலைமை ஆசிரியை மீது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அஞ்சலி செலுத்த வந்த எம்எல்ஏ அமலுவிஜயனிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். இந்நிலையில் தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை மாற்றக்கோரி, தொடர்ந்து நேற்று பள்ளியில் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பை புறக்கணித்தனர். மேலும் நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தலைமை ஆசிரியையை மாற்றவேண்டும், இல்லாவிட்டால் எங்கள் அனைவரையும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.ஆசிரியர்களுடன் மாணவிகள் சிலரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு, ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பாடம் எடுத்தனர். தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி ஆசிரியர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் சப்-கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் விஜயகுமார், நகராட்சித் தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.இந்நிலையில் நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டார். மேலும் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியையாக, அதே பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவு முதுகலை ஆசிரியை லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்….

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி