குடியாத்தம் அருகே கோயிலுக்கு சென்ற பெண்ணை கடித்து குதறிய தெருநாய்

குடியாத்தம், ஜூன் 18: குடியாத்தம் அருகே தெருநாய் கடித்து குதறியதால் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி கும்பிடுவதற்காக அதே பகுதியை சேர்ந்த கல்பனா(40) என்பவர் நேற்று சென்றுள்ளார். அப்போது, கோயில் வளாகத்தில் படுத்துக் கொண்டிருந்த நாய் திடீரென கல்பனாவை பார்த்து குரைத்துள்ளது. அவர் விரட்ட முயன்றபோது நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே அருகில் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனா கூச்சலிட்டபடி அலறியடித்து கொண்டு ஓடினார். ஆனால், விடாமல் விரட்டி சென்ற தெருநாய் கல்பனாவின் கை, கால் உட்பட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நாயை விரட்டியடித்தனர். பின்னர், நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த கல்பனாவை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு