Sunday, June 30, 2024
Home » குடியரசு தின விழா கண்கவர் அணிவகுப்பு: டெல்லியில் கோலாகலம்; 75 போர் விமானம் சாகசம்

குடியரசு தின விழா கண்கவர் அணிவகுப்பு: டெல்லியில் கோலாகலம்; 75 போர் விமானம் சாகசம்

by kannappan

புதுடெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில், முதல் முறையாக 75 போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல் மிரட்டல், கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நாட்டின் 73வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக 1.5 லட்சம் பேர் கலந்து கொள்ளக் கூடிய பிரமாண்ட விழாவில் நேற்று 5 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் விழாவில் பங்கேற்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு தலைவர்கள் யாரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தன்னலமின்றி சேவை புரிந்த துப்புரவு பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரும், ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்றவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.வழக்கமாக காலை 10 மணிக்கு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி தொடங்கும் நிலையில், இம்முறை பனிமூட்டமின்றி தெளிவாக பார்ப்பதற்காக அரை மணி நேரம் தாமதமாக, காலை 10.30 மணிக்கு விழா தொடங்கியது. முன்னதாக, பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று, நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதைக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு ஒன்றிய அமைச்சர்கள் வந்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சரியாக 10.30 மணிக்கு ராஜபாதைக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பாரம்பரிய வழக்கப்படி, 21 துப்பாக்கிகள் குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. 4 எம்-17 வி5 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடி, தேசியக் கொடிக்கு மலர் தூவின.வீர, தீரச் செயலுக்கான அசோக சக்ரா விருதினை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். லெப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ரா, மேஜர் ஜெனரல் அலோக் காகர் ஆகியோர் தலைமையில் ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. முதலில் ராணுவத்தின் குதிரைப் படையினரின் அணிவகுப்பு நடந்தது. உலகிலேயே குதிரைப்படையை கொண்டுள்ள ஒரே ராணுவம் இந்தியாதான். அதைத் தொடர்ந்து, 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த பிடி-76 டாங்கிகள், 75/24 பேக் ஹாவிட்சர் மற்றும் ஓடி-62 டோபாஸ் பீரங்கிகள் அணிவகுப்பு நடந்தது. விமானப்படையின் அலங்கார ஊர்தியில் மிக் 21, இலகு வகை ஹெலிகாப்டர்கள், ரேடார், ரபேல் போர் விமானங்களின் மாதிரிகள் இடம் பெற்றன. நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒன்றிய பொதுப்பணி துறையின் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது.நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாரம்பரிய நடனங்களை ஆடினர். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, 75 போர் விமானங்களின் வான்வழி சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில், ரபேல், சுகாய் உள்ளிட்ட போர் விமானங்கள் வானில் பறந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தின. நண்பகல் 12 மணிக்கு விழா நிறைவடைந்தது. இந்தாண்டு முதல் முறையாக நேற்று முன்தினம் ஆயிரம் டிரோன்கள் மூலம் இந்திய வரைபடம் வானில் ஒளிரப்பட்டது.குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இம்முறை டெல்லி எல்லைகள் அனைத்து சீல் வைக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 27,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். * 30 ஆண்டுகளுக்கு பிறகு லால் சவுக்கில் தேசியக் கொடிகாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் மணிக்கூண்டில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தினத்தில் நேற்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கடந்த 1992ல் தீவிரவாதம் உச்சத்தில் இருந்த சமயத்தில் பாஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி அங்கு தேசியக் கொடி ஏற்றினார். அதன்பிறகு தற்போது தான் மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்பட்டது. மேலும், வழக்கத்திற்கு மாறாக ஸ்ரீநகரின் பல இடங்களிலும் நேற்று மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.* 70 ஆண்டு கால சீருடையில் வீரர்கள்குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தின் சார்பில் 6 குழுக்கள் இடம் பெற்றன. வழக்கமாக ஒவ்வொரு குழுவிலும் 144 பேர் இடம் பெறும் நிலையில், கொரோனா காரணமாக இம்முறை 96 வீரர்களாக குறைக்கப்பட்டனர். இவர்கள், கடந்த 1950ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு காலகட்டங்களில் மாறிய வெவ்வேறு ராணுவ சீருடை மற்றும் துப்பாக்கியுடன் அணிவகுப்பு நடத்தியது அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் மாற்றப்பட்ட புதிய சீருடையிலும், ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.* வெளிநாடுகளில் கொண்டாட்டம்இந்திய குடியரசு தின விழா உலகின் பல நாடுகளிலும் இந்தியர்களால் கொண்டாடப்பட்டது. சீன தலைநகர் பீஜிங்கில் இந்திய தூதரகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, ஜனாதிபதி உரை வாசிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் தூதரக அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு சீனாவில் இந்திய குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவை கொண்டாடியது. * வீர தீர விருது பெற்றவர்களுக்கு கவுரவம்இந்தியாவின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா, அசோக சக்ரா விருதுகளை வென்றவர்கள் குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்பட்டனர். 1999ம் ஆண்டு கார்கில் போரில் மிகச்சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக பரம்வீர் சக்ரா வழங்கப்பட்ட ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ், சுபேதார் சஞ்சய் குமார் மற்றும் 2008ல் இம்பாலில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டதற்காக அசோக சக்ரா விருது பெற்ற கலோனல் ஸ்ரீராம் குமார் ஆகியோர் அணிவகுப்பில் முதல் நபர்களாக அணிவகுத்து வந்தனர்.* மத்திய பிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தியின் ஒரு பகுதியாக இருந்த டிரோன் ஒன்று தவறுதலாக பார்வையாளர்கள் பகுதிக்குள் விழுந்தது. இதில் 2 பார்வையாளர்கள் காயமடைந்தனர்.* பார்வையாளர்கள் இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தது. விழாவை யாரும் நின்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை.* கடற்படையின் அலங்கார ஊர்தியை பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று வழிநடத்தினர்.* விமானப்படையின் அலங்கார ஊர்தியில் ரபேல் விமானத்தின் முதல் பெண் விமானியான சிவாங்கி சிங் இடம் பெற்றார். அலங்கார ஊர்தியில் பங்கேற்ற 2வது பெண் விமானி என்ற பெருமையை சிவாங்கி பெற்றுள்ளார்.* காஷ்மீர் போலீஸ் அதிகாரிக்கு அசோக சக்ரா விருதுவிழாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு ராமுக்கு அசோக சக்ரா விருதினை வழங்கினார். கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, பாபு ராம் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதலின் அவர் வீரமரணம் எய்தினார். அவரது சார்பாக பாபு ராமின் மனைவி, மகன் ஆகியோர் அசோக சக்ரா விருதை பெற்றுக் கொண்டனர்.* கவனத்தை ஈர்த்த மோடியின் உடைஇந்தாண்டும் பிரதமர் மோடி அணிந்திருந்த தொப்பியும், சால்வையும் அனைவரது கவனத்தை ஈர்த்தன. அவர் அணிந்திருந்த தொப்பி உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியாகும். அது, பிரம்மகமலம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த தொப்பி நேதாஜி அணியும் தொப்பி போலவும் இருந்தது. இதேபோல், சால்வை மணிப்பூர் மாநிலத்தின் மெட்டே பழங்குடியின மக்களின் பாரம்பரிய லீரம் பீ ஆகும். அடுத்த மாதம் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உடை இரு மாநிலத்தின் பாரம்பரியத்தை உள்ளடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi