குடந்தையே குதூகளிக்கும் மாசி மகம்

மாசி மகம் 8-3-2020மாசி மக நன்னாளுக்குக் ‘கடலாடும் நாள்’ என்று பெயருண்டு. கடற்கரைக்கு அருகிலுள்ள திருக்கோயில்களின் தெய்வங்களுக்குக் கடலிலும், பிற கோயில்களின் தெய்வங்களுக்கு நதிகளிலும் குளங்களிலும் தீர்த்தவாரி நடப்பது மாசி மகத்தின் சிறப்பம்சமாகும். குடந்தையில் உள்ள சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் இவ்விழாகொண்டாடப்படும் விதத்தை இக்கட்டுரையில் காண்போம்:மகாமகக் குளமும் சிவாலயங்களும் மகாமகத்தின் சிறப்புபுனித நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, சரயூ, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளிலும் மனிதர்கள் நீராடித் தங்கள் பாபங்களைக் கழிக்கிறார்கள் அல்லவா? அந்தப் பாபங்களைத் தாங்கள் கழித்துக் கொள்ள என்ன வழி என்று அந்த ஒன்பது நதிகளும் சிவபெருமானிடம் பிரார்த்தித்தன. அதற்கு சிவபெருமான்,“கும்பகோண நகரின் அக்னி மூலையில் மகாமகக் குளம் என்றொரு குளம் உள்ளது. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மகநட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் நீராடினால் உங்களது பாபங்கள் அனைத்தும் நீங்கும்!” என்று கூறினார்.அவ்வாறே நவ நதிகளும் மகாமக நாளில் மகாமகக் குளத்தில் நீராடித் தங்கள் பாபங்களைப் போக்கிக் கொண்டன. அதனால் தான் மகாமக நாளில் அக்குளத்தில் நீராடுகையில், நீராடுபவரின் பாபங்கள் தீருவதோடு மட்டுமின்றி, நவ நதிகளும் அந்நாளில் அக்குளத்தில் நீராடுவதால், ஒரே நேரத்தில் அந்த ஒன்பது நதிகளில் நீராடிய புண்ணியமும் கிட்டிவிடுகிறது.மகாமகக் குளத்தின் வரலாறுஇந்த மகாமகக் குளம் உருவான வரலாறு குடந்தையின் சைவ ஸ்தல புராணங்களில் இடம்பெற்றுள்ளது. உலகைப் படைப்பதற்குரிய விதைகளை பிரம்ம தேவர் ஒரு குடத்தில் வைத்திருந்ததாகவும், வேடுவன் வடிவில் வந்த சிவபெருமான் அந்தக் குடத்தைத் தனது பாணத்தால் தாக்கியதாகவும், அதனால் உடைந்த குடத்தின் மூக்கு விழுந்த இடம் கும்பகோணம் (குடமூக்கு) என்று அழைக்கப் படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. (கும்பம் என்றால் குடம், கோணம் என்றால் மூக்கு). சிவனின் பாணத்தால் தாக்கப்பட்டு வெளிவந்த அமுதமே மகாமகக் குளமாக உருவானதாகவும் சொல்லப்பட்டுள்ளது.குடந்தையின் 12 சிவாலயங்கள்இந்த வரலாற்றின் அடிப்படையில் பன்னிரண்டு சிவ ஸ்தலங்கள் குடந்தையில் உருவாயின. அவை,1. நவநதிகளும் சிவனை வழிபட்ட காசி விஸ்வநாதர் கோயில்.2. குடத்தின் மூக்கு தங்கிய இடமான கும்பேஸ்வரர் கோயில்.3. குடத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான நாகேஸ்வரர் கோயில்.4. குடத்தின் உறி விழுந்த இடமான சோமேஸ்வரர் கோயில்.5. பூணூல் விழுந்த இடமான கௌதமேஸ்வரர் கோயில்.6. தேங்காய் விழுந்த இடமான அபிமுகேஸ்வரர் கோயில்.7. சிவன் வேடுவன் வடிவில் வந்து பாணம் எய்த   இடமான பாணபுரீஸ்வரர் கோயில்.8. புஷ்பங்கள் விழுந்த இடமான கம்பட்ட விஸ்வநாதர் கோயில்.9. மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடமான ஏகாம்பரேஸ்வரர் கோயில்.10. அமுதத் துளிகள் விழுந்த இடமான கோடீஸ்வரர் கோயில்.11. சந்தனம் விழுந்த இடமான காளஹஸ்தீஸ்வரர் கோயில்.12. அமுத கலசத்தின் நடு பாகம் விழுந்த இடமான அமிர்தகலசநாதர் கோயில். கோயில் தீர்த்தவாரிஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று, பிரம்மாவின் அமுதக் குடத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உருவான இத்திருக்கோவில்களில் உள்ள மூர்த்திகள், குடத்திலிருந்து சிந்திய அமுதிலிருந்து உருவான மகாமகக் குளக்கரைக்கு ரிஷப வாகனத்தில் வந்து, அங்கே வெகு விமரிசையாகத் தீர்த்தவாரி கண்டருள்வது வழக்கம். மகாமகக் குளத்தினுள் 20 தீர்த்தங்கள் உள்ளன. அக்குளத்தைச் சுற்றி 16 மண்டபங்களில் 16 சிவலிங்கங்களும் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மாசி மக நன்னாளான மகாமக நாளில், பாரத தேசத்தின் ஒன்பது புண்ணிய நதிகளும் தங்களது பாபங்களைப் போக்கிக் கொள்ள இந்த மகாமகக் குளத்துக்கு வருவதாலும், பன்னிரண்டு சிவாலயங்களிலுள்ள மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அங்கே தீர்த்தவாரி நடைபெறுவதாலும், அந்த மகாமகப் பெருவிழாவின் போது இக்குளத்தில் நீராடுவது மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.காவிரியும் வைணவத் திருக்கோயில்களும் குடமூக்கு உருவான விதம்குடந்தையைப் பற்றிய வைணவ ஸ்தல புராணங்களின்படி, தேவர்கள் பாற்கடலைக் கடைவதற்கு முன், ஒரு கும்பத்தில் திருமாலை ஆவாஹனம் செய்து வழிபட எண்ணினார்கள். அவ்வாறு கும்பத்தில் வைத்துத் திருமாலை ஆராதிக்கும் அர்ச்சகர் பொறுப்பில் சிவபெருமானை அமர்த்தினார்கள். சிவன் அனைத்தும் அறிந்த சர்வஜ்ஞராகவும், எப்போதும் தலையில் கங்கையை வைத்திருக்கும் தூயவராகவும் திகழ்வதால் இதற்கு அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் தேவர்கள். அந்தக் கும்பமே ‘கும்பகோணம்’ என்னும் நகரமாகும். அந்தக் கும்பத்தினுள் உள்ள அமுதமே ‘ஆராவமுதன்’ என்றழைக்கப்படும் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாள். அந்தக் கும்பத்தைப் பூஜித்த சிவனே ‘கும்பேஸ்வரர்’. ஆராத அமுதாக இனிக்கும் சார்ங்கபாணிப் பெருமாளின் அழகில் ஈடுபட்ட கும்பேஸ்வரர், இவரை ஒரு வடிவத்தால் மட்டும் ஆராதித்தால் போதாது எனக் கருதி, கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் போன்ற பற்பல வடிவங்கள் எடுத்துக் கொண்டு சார்ங்கபாணிப் பெருமாளை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்திருந்து ஆராதிக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. இக்கருத்தை வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் தமது அம்ருத சார்தூலம் எனும் துதியில்,“கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமும் யோக்யம் புராரிம் வ்யதாத்ஸர்வஜ்ஞம் த்ருதகங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத: ஸ்வஸ்யாதோ பஹுபிஸ்ஸமை: கலயிதும் பூஜாம்ஸ சாலாபத: ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ்த்வாம் கும்பகம் ஸேவதே”என்று பாடியுள்ளார்.குடந்தையின் 5 விஷ்ணு ஆலயங்கள்கும்பகோணத்தில் ‘பாணித்ரயம்’ பிரசித்தம். அதாவது சார்ங்கபாணி, சக்கரபாணி, கோதண்டபாணியான ராமஸ்வாமி ஆகிய மூன்று பெருமாள்களையே பாணித்ரயம் என்பார்கள். அவர்களுடன் நடாதூர் அம்மாள் உடனுறை ஸ்ரீராஜகோபாலன், வராகப் பெருமாள் என மொத்தம் ஐந்து விஷ்ணு ஆலயங்கள் குடந்தையில் பிரசித்தியானவை.மாசி மக உற்சவத்தின் பின்னணிவராகப் பெருமாள் பிரளயக் கடலில் மூழ்கி இருந்த பூமி தேவியை மீட்டுக்கொண்டு முதன்முதலில் வெளிவந்த இடம் கும்பகோணம் தான் என்று குடந்தையின் ஸ்தல புராணம் சொல்கிறது. அவ்வாறு தான் மீட்ட பூமிதேவியாகிய அம்புஜவல்லித் தாயாரைத் தனது இடது தோளில் அமர்த்தியபடி ஆதிவராகர் இன்றும் குடந்தையில் காட்சி தருகிறார். இவர் தான் குடந்தையில் முதன்முதலில் தோன்றிய பெருமாள் என்றும் கும்பகோணமே வராக க்ஷேத்திரம் என்றும் ஸ்தல புராணம் சொல்கிறது. இவ்வாறு பூமியை மீட்டுக் கொண்டு முதன் முதலில் கும்பகோணத்தில் வராகப் பெருமாள் தோன்றிய நாள் மாசி மக நன்னாளாகும். எனவே வருடந்தோறும் மாசி மகத்தை ஒட்டி அவருக்குப் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். நிறைவு நாளான மாசி மக நாளில் திருக்கோயிலிலேயே பெருமாளுக்குத் தீர்த்தவாரி நடைபெறும். மேலும், குடந்தையிலுள்ள சக்கரபாணி கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை மாசி மகத்தன்று சூரியன் வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது. அதை ஒட்டி சக்கரபாணி பெருமாளுக்குக் காவிரியில் மாசி மகத்தன்று வருடந்தோறும் தீர்த்தவாரி நடைபெறும். நடாதூர் அம்மாள் உடனுறை ராஜகோபாலன் கோயிலில் பெருமாளுக்குக் கோயிலிலேயே தீர்த்தவாரி நடைபெறும். ஸ்ரீசார்ங்கபாணி பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தை ஒட்டிப் பொற்றாமரைக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். பாற்கடலையே குளமாகவும், ஆதிசேஷனையே தெப்பமாகவும் உருவகப்படுத்தி, பாற்கடலில் ஆதிசேஷன் மேல் திருமால் எழுந்தருளியிருப்பதையே தெப்ப உற்சவத்தின் வாயிலாக நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.மகாமகத் தீர்த்தவாரிபன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் மகாமகத்தன்று ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாள், ஸ்ரீசக்ரபாணிப் பெருமாள், ஸ்ரீராமஸ்வாமி, நடாதூர் அம்மாள் உடனுறை ஸ்ரீராஜகோபாலன், ஆதி வராகப் பெருமாள் ஆகிய ஐந்து பெருமாள்களுக்கும் காவிரிக்கு எழுந்தருளி, அங்கே விசேஷமான தீர்த்தவாரி கண்டருளுவார்கள். எனவே ஆண்டுதோறும் மாசி மகத்தன்று சைவர்கள் மகாமகக் குளத்திலும், வைணவர்கள் பொற்றாமரைக் குளத்திலும் காவிரியிலும் நீராடுவது வழக்கம்.“அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதிபுண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதிவாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதிகும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி”என்கிறது கும்பகோணத்தைப் பற்றிய புராண ஸ்லோகம். சாதாரண ஊரில் பாபம் செய்தால், புண்ணியத் திருத்தலங்களில் அதைப் போக்கிக் கொள்ளலாம். புண்ணியத் திருத்தலங்களில் பாபம் செய்தால் காசிக்குப் போய் அதைப் போக்கிக் கொள்ளலாம். காசியிலேயே பாபம் செய்தால் அதைக் கும்பகோணத்தில் போக்கிக் கொள்ளலாம். கும்பகோணத்தில் பாபம் செய்தால், அதைக் கும்பகோணத்திலேயே போக்கிக் கொள்ளலாம் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருளாகும்.தொகுப்பு: குடந்தை உ.வே.வெங்கடேஷ்

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!