குஜிலியம்பாறை அருகே ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயிலில் புஷ்ப யாக வழிபாடு: பெருமாளை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்

குஜிலியம்பாறை, ஏப்.11: குஜிலியம்பாறை அருகே ராமகிரி  கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் பங்குனி திருவிழா நிறைவு நாள் விழாவில் நடந்த புஷ்ப யாக வழிபாட்டில் பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் மிகவும் பழமை வாய்ந்த  கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. திருமண கோலத்தில் அமைந்துள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பங்குனி தேரோட்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கடந்த மார்ச்.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.4ம் தேதி இரவு திருக்கல்யாணம் மகா உற்சவ விழா சிறப்பாக நடந்தது.

ஏப்.6ம் தேதி பங்குனி தேரோட்டம் விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து திருவிழா நிறைவு நாள் 12ம் நிகழ்ச்சியாக புஷ்ப யாக உற்சவம் பூர்த்தி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மல்லிகை, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, தாமரை, துளசி உள்ளிட்ட 108 வகை மலர்களை கொண்டு,  கல்யாண நரசிங்க பெருமாள், தேவி, பூதேவி, கமலவள்ளி தாயார் ஆகிய தெய்வங்கள் முன்பு அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டது. இதையடுத்து புஷ்ப யாக வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. புஷ்ப யாக சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் விகேஏ.கருப்பண்ணன் செய்திருந்தார். இதில் கோயில் மணியக்காரர் சதாசிவம், மூத்த அர்ச்சகர் ராமகிருஷ்ணன், அர்ச்சகர்கள் ராஜேஸ், ரமேஷ், மண்டகப்படிதாரர்கள், கோயில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

கொலை வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பொன்னமராவதி அருகே கோயில் நிலைத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை

பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு